கடந்த ஒரு வாரமாகவே தமிழ்சினிமாவைக்கலக்கிய வில்லன்கள் ரஜினிகாந்த்- சிட்டி, கமல்ஹாசன் கெய்த் ஃபிளச்சர், ரகுவரன், சத்யராஜ் (பலபடங்களில் ) வில்லாதிவில்லன்களுடன் ஆத்ரேயனும் (சூர்யா) என்பதுமாதிரியான சுவரொட்டிகள் 24 படத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தன. அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் 24 படத்தில் ஆத்ரேயனாக வரும் சூர்யா மிரட்டியிருக்கிறார். தான் குறிவைத்து சுட்ட தோட்டாவிலேயே அவர் பலியாவது மிகவும் சுவராஸ்யமான இறுதிகாட்சியாக அமைந்துவிடுகிறது எனினும், சூர்யாவின் வில்லத்தனத்தை பாராட்ட இடைவேளை காட்சி ஒன்று போதும், தனது அண்ணன் மகனை சகட்டுமேனிக்குச் சுட்டுவிட்டு கடிகாரத்தைக் கழட்டுவார் என்று பார்த்தால் கையோடு வெட்டி எடுக்கும் அந்த ஒரு காட்சி போதும். சக்கர நாற்காலியில் ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டு அவர் செய்யும் வில்லத்தனங்கள் தமிழ் சினிமாவிற்குப் புதிது. அதி நவீன வசதிகள் கொண்ட சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நல்லவனாக நடித்துக்கொண்டே சூர்யா செய்யும் வில்லத்தனம், டெர்ரர். சக்கர நாற்காலி என்றாலே உஷாராக இருக்கவேண்டும் என்கிற விழிப்புணர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்திவிடுகிறார் இயக்கு நர் விக்ரம் குமாரின் – ஆத்ரேயா.
அயன் படத்திற்குப் பிறகு, சூர்யாவின் காதல் காட்சிகள் 24 லில் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. அதில் தமன்னாவுடனான கெமிஸ்ட்ரி என்றால் இதில் சமந்தா. அதில் பலசரக்குக் கடை, இதில் கடிகாரம் பழுதுபார்க்கும் கடை, அதில் ரேணுகா – இதில் சரண்யா என்று, அதில் ஜெகன் இதில் சத்யன் என்றுன் பெரிய ஒற்றுமைகளுக்கு நடுவிலும் அயனை விட அதிகமாகவே சூர்யாவின் ரசிகர்களுக்குக் காதல் காட்சிகளில் தீனி போடும் படமாக 24 அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.
இன்றைய இளைஞன் மணியாக, நேற்றைய சேதுராமன் – ஆத்ரேயாவாக, இன்றைய சக்கர நாற்காலி ஆத்ரேயாவாக சூர்யா பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
வெகுளியான அம்மாவாக நித்யாமேனன் என்றால் தியாகத்தின் சிகரம் அம்மாவாக சரண்யா தனித்தனியாக ஜெயித்துவிடுகிறார்கள்.
கெளதம் – ஹாரிஸ் கூட்டணியை நினைவுபடுத்தும் ஏ ஆர் ரஹ்மானின் இசை, பாடல்கள் அனைத்தும் அருமை என்றால், நடன அமைப்புகள் மற்றும் படம்பிடிக்கப் பட்ட இடங்கள் என்று அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்ட இரண்டு பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் , படத்தின் இறுதிக்காட்சியில் குப்பைமேட்டிற்குச் செல்வது நெருடல். எந்திரன் சிட்டியும் டிஸ்மேண்டில் செய்யப்பட்டு குப்பைமேட்டிற்குச் செல்கிறார் என்றால், 24 நேர இயந்திரக்கடிகாரமும் குப்பைக்குச் சென்று விடுகிறது. அந்த நேரங்களில் இதற்காகவா இவ்வளவு மெனக்கடல்கள் என்கிற எண்ணம் எழாமலில்லை.
நிஜமாக , இந்த நேர இயந்திரக் கைக்கடிகாரம் இருந்துவிட்டால் மட்டுமென்ன , நாம் என்ன ராஜராஜன் காலத்திற்கு அல்லது குறைந்த பட்சம் காமராஜர் காலத்திற்கோ அல்லது குறைந்த பட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததற்கோ முன்பாகச் சென்று நடைபெறவிருக்கும் துரதிஷ்டங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கவா முடியும். அப்படி ஒரு நல்ல விஷயம் நடப்பதை உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை விட்டுவிடுவார்களா என்ன..? ஆத்ரேயா சதி அரசியலின் மொத்த உருவம்.
தமிழ் சினிமாவைப் பார்த்து மற்றவர்களைப் பிரமிப்படைய வைக்கும் படம் இந்த 24.
– Vijay Anandh