போலீஸ் படங்களில் இருவகை உண்டு.. முதல்வகை ரவுடி, அரசியல்வாதிகளுடன் மோதி அவர்கள் கொட்டத்தை அடக்கும் போலீஸ் படங்கள் என்றால், இன்வெஸ்டிகேஷன் எனப்படும் துப்பறியும் கதைகள் இரண்டாவது வகை.. அருள்நிதி நடித்துள்ள இந்த ஆறாது சினம் இரண்டாவது வகை. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘மெமோரீஸ்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் என்பது கூடுதல் சிறப்பு.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் மதுரையை சுற்றி வெவ்வேறு ஊர்களில் சில மாதங்கள் இடைவெளியில் வரிசையாக மூன்று கொலைகள் நடக்கின்றன. கொல்லப்பட்டவர்கள் மூவரும் ஆண்கள். கொலை நடந்த விதத்தில் அது ஒரு சைக்கோ சீரியல் கில்லர் என்பது தெளிவாகிறது.. லோக்கல் போலீஸ் அதிகாரியான ரோபோ சங்கர் இதை கண்டுபிடிக்க திணறுகிறார்..
இந்தநிலையில் ரவுடி ஒருவனால் தனது மனைவி, குழந்தை இருவரையும் கண்முன்னே பலிகொடுத்த விரக்தியில் வேலைக்கே போகாமல் குடிகாராராக மாறிவிட்ட, ஆனால் திறமைசாலியான போலீஸ் அதிகாரியான அருள்நிதியை இந்த வழக்கை விசாரிக்க வேண்டுகோள் வைக்கிறார் உயர் அதிகாரி ராதாரவி.
ஆரம்பத்தில் மறுக்கும் அருள்நிதி, பின்னர் தனது அம்மா துளசியின் வற்புறுத்தல் காரணமாக விசாரணையில் இறங்குகிறார். இந்த நேரத்தில் நான்காவது கொலையும் நடக்க விசாரணையை துரிதப்படுத்துகிறார் அருள்நிதி. இறுதியாக ஐந்தாவது கொலை நடக்கப்போவதாக அவர் கண்டுபிடிக்கும்போது, அந்த ஐந்தாவது நபரை கடத்துகிறான் அந்த சைக்கோ கொலைகாரன்.
அருள்நிதியால் அந்த சைக்கோ கில்லரை மடக்கி அந்த நபரை காப்பாற்ற முடிந்தததா..? இந்த சீரியல் கொலைகளின் பின்னணி என்ன என்பது விறுவிறு க்ளைமாக்ஸ்.
நீண்ட நாளைக்குப்பின் ஒரு நல்ல இன்வெஸ்டிகேஷன் த்ரில்லரை பார்த்த சந்தோஷத்தை தருகிறது இந்தப்படம். சதா சர்வ நேரமும் குடித்துக்கொண்டே விசாரணை செய்யும் போலீஸ்காரராக அருள்நிதிக்கு இதில் நிச்சயம் வித்தியாசமான கேரக்டர்தான்.. அதை சோடைபோக விடாமல் சரியாக செய்திருக்கிறார் அருள்நிதி. வழக்கை அவர் விசாரிக்கும் விதம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கொஞ்ச நேரமே வந்தாலும் பளீர் புன்னகையால் மனதில் நிற்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ராதாரவியும் துளசியும் கதைக்கு பக்கபலமாக நின்று பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. தற்பெருமை போலீஸ் அதிகாரியாக வரும் ரோபோ சங்கர் பிரஸ்மீட் சமயங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். நீண்ட நாளைக்குப்பின் சார்லியும் தலைகாட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட கொஞ்சம் நீண்ட கௌரவ வேடத்தில் சைக்கோ கில்லராக தூங்காநகரம் கௌரவ்.. அவரது நடிப்பும் கொலைகளுக்கான கனமான பின்னணியும் கதைக்கு விறுவிறுப்பை தருகின்றது. அதேசமயம் சின்னச்சின்ன குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. என்னதான் திறமையானவராக இருந்தாலும் எந்நேரமும் குடித்துக்கொண்டே இருக்கும் அதிகாரியை விசாரணை செய்ய சொல்வது கொஞ்சம் இடிக்கிறது.,
அதுமட்டுமல்ல, வெவ்வேறு லிமிட்டில் நடக்கும் கொலையை ஒரே போலீஸ் அதிகாரியான ரோபோ சங்கர் ஹேண்டில் செய்வது, அதிலும் அந்த உதவி கமிஷனர் கதாபாத்திரத்தை காமெடியாக சித்தரித்திருப்பது என சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பில் அவை பெரிய அளவில் குறைகளாக தென்படவில்லை என்பதும் உண்மைதான். மலையாள ஒரிஜனலுக்கு எந்த குந்தகமும் பண்ணாமல் அப்படியே அழகாக தமிழுக்கு அதை மாற்றியதற்காகவே இயக்குனர் அறிவழகனை பாராட்டலாம்.
ஆறாது சினம் – நல்ல ஒரு பொழுதுபோக்கு படம்