மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் ‘அன்பு’ பாலா..!


வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று நட்சத்திர தம்பதிகளாவது விவகாரத்துக்காக கோர்ட் படியேறுவது தவிர்க்க முடியாத நிகழ்வு ஆகிவிட்டது.. சமீபத்தில் தான் அமலாபால்-ஏ.எல்.விஜய் விவாகரத்து செய்தி அலையடித்து சற்றே ஓய்ந்தது. அப்போது அந்தப்பட்டியலில் அடுத்த இடத்தை நடிகர் ‘அன்பு’ பாலா நிரப்பியிருக்கிறார் என்பது வேதனையான விஷயம் தான். ஆம்.. ஏற்கனவே விவகாரத்து கேட்டு அவரது மனைவி மனு செய்திருந்த நிலையில் கேரளாவில் உள்ள கலூர் நீதிமன்றம் அவர்களுக்கு நேற்று முன்தினம் விவாகரத்து வழங்கியுள்ளது.

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் சென்ற இவர் அத்துடன் ‘ஹிட்லிஸ்ட் என்ற படத்தையும் இயக்கினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான அம்ரிதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். அம்ரிதா சுரேஷ் ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமானவர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு. இந்த விவாகரத்து விஷயம் தொடர்பாக கடந்த வருடமே ஊடகங்களில் செய்திகள் வெளியானபோது கணவன், மனைவி இருவருமே அதை மறுத்து வந்தனர்.. ஆனால் இதோ நீதிமன்றம் அதை உறுதிப்படுத்தியுள்ளது.. இவர்களது மகள், அம்மாவுடன் தான் இருக்கவேண்டும் என நீதிமன்றம் கூறினாலும், தனது மகளை தடையில்லாமல் தான் சந்திக்க உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளாராம் பாலா.