பெற்றோர்களுக்கா, குழந்தைகளுக்கா இல்லை ஆசிரியர்களுக்கா, எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்கிற மேசெஜுடன் வெளியாகி இருக்கும் படம் தான் ‘அம்மா கணக்கு’.
கணவனை இழந்து, வீட்டுவேலை செய்து வரும் அமலாபால், தனியாளாக தனது மகள் யுவஸ்ரீயை சிரமப்பட்டு படிக்க வைக்கிறார். ஆனால் பாடம் மண்டையில் ஏறாமல் படிக்கவே சிரமப்படும் யுவஸ்ரீ டிவி, விளையாட்டு என அசிரத்தையாய் இருக்கிறார்.. தான் வேலைபார்க்கும் வீட்டுமுதலாளியான ரேவதியிடம் அமலாபால் இதுபற்றி புலம்ப, நீ ஏன் படிக்க கூடாது என அமலாபாலிடம் கேட்பதோடு மகள் படிக்கும் பள்ளியிலேயே பத்தாம் வகுப்பு சேர்த்தும் விடுகிறார் ரேவதி.
ஏற்கனவே அம்மாவின் மேல் வெறுப்பாக இருக்கும் மகள், அம்மாவே படிக்கும் விஷயத்திலும் போட்டியாக வந்தது கண்டு வெறுப்பாகிறாள்.. நீ என்னைவிட மதிப்பெண்கள் வாங்கிவிட்டால் நான் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விடுகிறேன் என்கிறார் அமலாபால். அமாலாபாலின் இந்த முயற்சி பலனளித்ததா இல்லையா என்பது தான் மீதிக்கதை..
அம்மாவும் மகளும் ஒரே வகுப்பில் படிக்க முடிந்தால் என்கிற கற்பனை வரியை எடுத்துக்கொண்டு முழுப்படத்தையும் நகர்த்தி இருக்கிறார்கள். அமாலாபாலும், மகளாக நடித்திருக்கும் யுவஸ்ரீயும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நூறு சதவீதம் நிறைவேற்றி இருந்தாலும் திரைக்கதை அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். சமுத்திரக்கனியின் பாத்திரப்படைப்பும் அவரது நடிப்பும் கூட நாடகத்தனமாகத்தான் இருக்கிறது. இளையராஜாவின் இசை மட்டுமே அவ்வப்போது ஆறுதல் தருகிறது.
அம்மா மகளுக்கான புரிதல் இல்லாதது ஏன் என்பதை இயக்குனர் சரியாக விளக்கவில்லை.. சரியாக படிக்காத மகளை படிக்கவைக்க அம்மாக்களும் அவர்களுடன் படிக்க செல்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதபோது என்ன மாதிரியான தீர்வை இந்தப்படம் முன் வைத்தாலும் அது செயற்கையாகத்தான் இருக்கிறது.
எந்த பிள்ளையையும் படி படி என நச்சரிக்கும் அம்மாக்கள் தாங்கள் வேளையில் படும் கஷ்டங்கள், சம்பாதிக்க படும் சிரமங்களை தங்களது குழந்தைகளிடம் நிச்சயம் சொல்வார்கள் என்பதே உலக நியதி. அத்தனை வருடமாக கஷ்டப்பட்டு தன்னை வளர்க்கும் அம்மா என்ன வேலை பார்க்கிறாள், எப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாள் என தெரியாமல் ஒரு மகள் இருக்கிறாள் என்றால் மிகப்பெரிய லாஜிக் மிஸ்ஸிங் அதுதான்.
படிப்பு வராத, அல்லது படிப்பில் அலட்சியம் காட்டுகிற மகளை வழிக்கு கொண்டுவர அம்மாவும் மகளுக்கு போட்டியாக பள்ளிக்கூடம் போகிறாள் என்பது கதைக்கு சுவாரஸ்யம் அளித்தாலும், திரைக்கதையில் அதை நம்பும்படியாக, நெகிழ்சியாக பண்ணாமல் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரி. இருந்தாலும் பள்ளி மாணவிகளின் புரிதல் திறன், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் பற்றிய சரியான நிகழ்வுகளை காட்டியிருப்பதை பாராட்டலாம்.. குறிப்பாக குழந்தைகளின் படிப்பில் பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களது அணுகுமுறையை மாற்றவேண்டும் என்பதை சொன்னதற்காக இந்த அம்மா கணக்கிற்கு பாஸ்மார்க் போடலாம்.
Rating: 2/5