அப்பா – விமர்சனம்


குழந்தைகளை தவறாக எண்ணுவதாலும், அவர்கள் மீது தங்களது ஆசைகளை திணிப்பதாலும் ஏற்படும் விளைவுகளை யதார்த்தமாக அதேசமயம் பொட்டில் அடித்தமாதிரி சொல்லியிருக்கும் படம் தான் இந்த அப்பா. இன்னும் சொல்லப்போனால் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நான்கு அப்பாக்கள் அவர்கள் எப்படி தங்களது பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதுதான் ‘அப்பா’வின் ஒரு வரி கதை.

எந்தவொரு கேரக்டராக இருந்தாலும் அதில் சமுத்திரகனி குறைகூற முடியாத நடிப்பை எப்போதும் வழங்குவார். இதில் பொறுப்புள்ள ஒரு அப்பாவாக வாழ்ந்துள்ளார். தவறான முடிவு எடுக்கும் மனைவியை அனுசரித்து போகும்போதாகட்டும், காணாமல் போன மகனை தேடி அலையும்போதாகட்டும் சமுத்திரக்கனி மனத்தில் அழுத்தம் திருத்தமாக பதிந்து விடுகிறார்.

தம்பி ராமையா எப்போதும் போலவே ஸ்கோர் செய்திருக்கிறார். மகனை பயமுறுத்தி தன் இஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும் ஒரு அப்பன் கேரக்டரில், இதற்கு மேல் நடிக்க ஆளில்லை என்பதை போல் அனைத்தையும் முடித்திருக்கிறார் தம்பி ராமையா. நமோ நாராயணன், வேலா ராமமூர்த்தி, ப்ரீத்தா, வினோதினி என துணை கதாபாத்திரங்களும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

சமுத்திரகனியின் மகனாக வரும் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், தம்பி ராமையாவின் மகனாக வரும் ராகவ், நமோ நாராயணின் மகனாக வரும் நாசாத், திண்டுக்கல் அலெக்ஸின் மகளாக வரும் காபிரெல்லா, தந்தையை இழந்த மாணவியாக வரும் யுவஸ்ரீ என படத்தில் நடித்துள்ள அத்தனை குழந்தைகளும் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

சமுத்திரகனியின் உணர்வுப்பூர்வமான திரைக்கதைக்கு இளையராஜாவின் இசையும், ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளன. பல காட்சிகளில் சினிமாத்தனமே இல்லாமல் தன்னுடைய மாயாஜால இசையினால் காட்சிகளை அப்படியே நகர்த்திக் கொண்டே போகிறார் இசைஞானி இளையராஜா.

அப்பா கிட்ட சொல்ல முடிஞ்ச விஷயத்தை மட்டும் பன்னு. சொல்ல முடியாத விஷயம்னா அது தப்புன்னு அர்த்தம். பண்ணாதே என மகனை நெறிப்படுத்தும் சமுத்திரகனி, தன் மகனின் சக மாணவியை அவன் தோழியாக பார்க்க சொல்லும் அந்த காட்சிகள் அருமை.. இப்படிப்பட்ட தந்தைகளாக இனி வரும் காலத்தில் அனைவரும் மாறினால் தான் சுவாதி போன்ற பெண்களின் துயரங்களுக்கு விடியல் கிட்டும் என்கிற நினைப்பு படம் முடிந்ததும் நம் மனதில் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை.

.