பெங்களூர் நாட்கள் – விமர்சனம்


மலையாளத்தில் வெளியான ‘பெங்களூர் டேய்ஸ்’ படம் தான் இங்கே பெங்களூர் நாட்கள்’ ஆக ரீமேக்காகி இருக்கிறது.

ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் கசின்ஸ் என்றாலும் அதையும் தாண்டி சிறுவயதிலிருந்து திக்கோ திக் ஃப்ரண்ட்ஸ்.. இவர்கள் மூவரின் சிறுவயது கனவும் பெங்களூருக்கு போய் ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்பது தான். வளர்ந்து பெரியவர்களானதும் பாபி சிம்ஹாவுக்கு பெங்களூரில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைக்கிறது.. ஸ்ரீதிவ்யாவுக்கு பெங்களூரில் வேலைபார்க்கும் ராணாவுடன் திருமணமாகிறது. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த ஆர்யாவுக்கும் அதே பெங்களூரில் ரேஸ் பைக் மெக்கனிக்காக வேலை கிடைக்கிறது.

இதில் திருமணமாகும் முன்பே தான் ஒரு பெண்ணை (சமந்தா) காதலித்த விவரத்தை முன்கூட்டியே சொல்லி ஸ்ரீதிவ்யாவை திருமணம் செய்யும் ராணா, திருமணத்துக்குப்பின்னும் அந்த பெண் நினைவிலேயே ஸ்ரீதிவ்யாவுடன் ஒட்டாமல், வாழ்க்கை நடத்துகிறார்.

ஆனால் துறுதுறு ஸ்ரீதிவ்யாவோ கணவன் வெளியூர் சென்றதும் தனிமையை போக்க, ஆர்யா, பாபி இருவருடனும் சேர்ந்துகொள்ள, மூவரும் பெங்களூரை சுற்றிச்சுற்றி ஜாலி ட்ரிப் அடித்து தங்களது சிறுவயது கனவை நனவாக்கிக் கொள்கிறார்கள். இடையே பாபி சிம்ஹாவுக்கு ஏர் ஹோஸ்டஸான ராய் லட்சுமியுடனும், ஆர்யாவுக்கு ரேடியோ ஜாக்கியான ‘மரியான்’ பார்வதியுடனும் லவ் மூட் ஸ்டார்ட் ஆகிறது.

ராய் லட்சுமி ஒருகட்டத்தில் பாபியை விட்டு தனது முந்தைய காதலனுடன் சேர்ந்துகொள்ள, பார்வதியோ தனது தாயின் ஆலோசனைப்படி வேறு வழியின்றி வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார். பார்வதியை கைபிடிப்பதற்காக பைக் ரேஸில் கலந்துகொள்ள முடிவு செய்யும்போது, ராணாவின் ஃப்ளாஸ்பேக் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்யா, அதை ஸ்ரீதிவ்யாவிடம் விளக்க, கோபித்துக்கொண்டு ஊருக்குச்சென்ற ஸ்ரீதிவ்யா காதலுடன் திரும்பி வருகிறார்.

அதை ஆர்யா மூலம் ராணாவும் உணர்கிறார். கடைசியில் ராணா – ஸ்ரீதிவ்யா திருமண வாழ்க்கையில் தென்றல் வீசியதா, பாபி சிம்ஹா மீண்டும் காதல்வயப்பட்டாரா, ஆர்யா – பார்வதியின் காதல் சக்சஸ் ஆனதா என மூன்று பிரச்சனைகளுக்கும் சுபமான தீர்வு சொல்லி, மகிழ்ச்சியாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர்.
.
பைக் ரேஸ் வீரராக ஆர்யா. விட்டேத்தியான மனப்பான்மையுடன், வாழ்க்கையை அந்த நிமிடத்திலேயே வாழ்ந்துவிட துடிக்கும் இளைஞனை நம் கண் முன் நிறுத்துகிறார் ஆர்யா.. அவரது செல்பி மோகம் சரியான கலாட்டா. ஸ்ரீதிவ்யாவை அவரது கணவன் முன்பே நட்புடன் கட்டிப்பிடிக்கும்போது, நமக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறார் அதேபோல பார்வதிக்கும் அவருக்குமான காதல் க்ளாசிக் ரொமான்ஸ்.

பாபி சிம்ஹா எதார்த்த நாயகன்.. நண்பர்களுக்குள் பாலமாக இவர் செயல்படும் அழகே தனி. தனது கிராமத்து அம்மா பெங்களூர் வந்தபின் செய்யும் அலப்பறைகளை தாங்கமுடியாமல் முனகுவது செம காமெடி.. ராய் லட்சுமியுடன் காதலை ஏற்படுத்த மெனக்கெட்டு, பின் அந்த காதல் ஒர்க் அவுட் ஆகாமல் கடைசியில் பல்பு வாங்கும்போதுகூட நம்மை சிரிக்க வைக்கிறார்.

ராணா அமைதியான நடிப்பால் தனது கேரக்டருக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார். ஆர்யாவும் பாபியும் படபடவென வடைச்சட்டியில் போட்ட கடுகு மாதிரி பொரிந்து தள்ள, அமைதியான கேரக்டரில் அதிர்ந்து பேசாமல் அளந்து பேசும் வார்த்தைகளுடன் அண்டர்பிளே செய்து அப்ளாஸ் அள்ளுகிறார் ராணா.

ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா இவர்களின் நட்பு லேட்டஸ்ட் ‘புது வசந்தம்’. இவர்கள் மூன்று பேரும் அடிக்கும் லூட்டிகளை பார்க்கும்போது ஆண், பெண் நட்பு என்றால் இப்படித்தான் கள்ளங்கபடமில்லாமல் இருக்கவேண்டும் என மனதில் ஒரு புது உணர்வு தோன்றுகிறது.

அடுத்ததாக ஸ்ரீதிவ்யாவும் தன் பங்கிற்கு கேரக்டரை உள்வாங்கி ஜாலியாகவும் அதேசமயம் பக்குவமாகவும் நடித்திருக்கிறார்.ரேடியோ ஜாக்கியாக துள்ளலான குரலில் பேசி அனைவரையும் தன்வசப்படுத்தும் பார்வதி எலக்ட்ரிக் வீல் சேரில் வலம் வரும்போது ஆர்யாவுக்கு மட்டுமல்ல நமக்கும் எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கிறார். ஆனால் அவரது நடவடிக்கை,, பேச்சுக்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை டானிக் தருகிறார். இந்த கேரக்டரை தமிழிலும் இவரே செய்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கொஞ்ச நேரமே வந்தாலும் சமந்தா க்யூட். இந்த கூட்டத்தில் ராய் லட்சுமி தான் பாவம்.. அவ்வளவாக எடுபடவில்லை. பாபி சிம்ஹாவின் அம்மாவாக வரும் சரண்யாவின் காமெடி இன்னொரு பக்கம் நம்மை ரிலாக்ஸ் பண்ணுகிறது. பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், சன் டிவி ராஜா என மற்ற சில கதாபாத்திரங்களும் கன பொருத்தம்.

குகனின் ஒளிப்பதிவு பெங்களூர் முழுக்க சுற்றி அதன் புதிய அழகை அள்ளிவந்து நம் முன் தூக்கிப்போடுகிறது. கோபிசுந்தரின் இசையில் அந்த கல்யாண வீட்டுப்பாடலை கேட்டால் ஜாலி மூட் வந்து நீங்களும் ஆட ஆரம்பித்து விடுவீர்கள்.

படத்திற்கு பொருத்தமான மூன்று முன்னணி இளம் ஹீரோக்களையும் அவர்களுக்கு ஏற்ற ஜோடிகளையும் தேர்வு செய்ததில் சபாஷ் பெறுகிறார் இயக்குனர் பாஸ்கர். இத்தனை நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு அவர் வேலை வாங்கியிருக்கும் விதமே அழகு. ஃபீல் குட் ஸ்டோரி என்று சொல்வார்களே அப்படி ஒரு படத்தைத்தான் அழகாக வடித்திருக்கிறார்.

ஆண்-பெண் நட்பில் துளிகூட காதலை கலக்காமலும் அந்த நட்பை மற்றவர் சந்தேகப்படாமலும் கொண்டு சென்றிருப்பதன் மூலம் வழக்கமான சினிமா பாதையில் இருந்து மாறி ஒரு நேர்த்தியான படைப்பை தந்திருக்கிறார். மலையாளத்தில் இதன் ஒரிஜினலை பார்க்காமல் நேரடியாக தமிழில் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பொழுதுபோக்கு காத்திருக்கிறது.