தஞ்சாவூர் தங்க தம்பி அதர்வா.. தடகள சாம்பியனாக ஆசைப்படும் அவருக்கு சின்னதாக காயம் பட்டாலும் கூட, அவ்வளவு சீக்கிரம் ரத்தம் உறையாமல் உயிருக்கே உலைவைக்கிற ஒரு வித்தியாசமான வியாதி.. கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்கிரார்கள் அப்பா ஜெயபிரகாஷும் கோச் ஆடுகளம் நரேனும்.
விளையாட்டு போட்டிக்காக சென்னைக்கு வந்த இடத்தில், செல்போனில் வளர்த்த ஸ்ரீதிவ்யாவின் காதலுக்காக உதவப்போய், கள்ளநோட்டு அடிக்கும் கும்பலிடம் வீண்வம்பை விலைக்கு வாங்குகிறார் அதர்வா. ஆரம்பத்தில் அடிவாங்கி ஓடும் கும்பல், அதர்வாவின் நோய் பற்றி தெரிந்துகொண்டு ஆக்ரோஷமாக தாக்க முயற்சிக்கிறது.. அதர்வா தப்பினாரா..? தாக்கினாரா..? சிக்கினாரா..? சிதைத்தரா..? என்பது க்ளைமாக்ஸ்.
விளையாட்டு, காதல், அதில் குறுக்கிடும் ரவுடியிசம் என மூன்று ஏரியாக்களை சமபக்க முக்கோணமாக இணைத்து படம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. கடந்த இரண்டு படங்களாக நொண்டி அடித்துவந்த சண்டிவீரன் அதர்வாவை, உசுப்பேத்தி அடுத்த கட்டத்திற்கு நகரவைத்திருக்கிறது இந்தப்படம்.. அதற்கான மெனக்கெடல், உழைப்பு எல்லாம் ஒவ்வொரு முறையும் அதர்வா பனியனை கிழிக்கும்போது நன்றாகவே தெரிகிறது.
ஆகா, ஓஹோ காதல் காட்சியெல்லாம் இல்லை. செல்போன் ராங் நம்பர் மெத்தேடில் காதலை உள்ளே நுழைத்த இயக்குனர் ரவி அரசு, ஆக்சனில் காட்டிய மெனக்கெடலை காதலில் காட்டவில்லை.. ஆனால் டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸை கிப்ட்டாக தரும் இடம் சூப்பர்.. காதலை ஒருவித அவசரத்தனமாகவே வெளிப்படுத்தும் ஸ்ரீதிவ்யா, இதுவரை தான் நடித்த படங்களில் இருந்து கொஞ்சம் கூட வித்தியாசப்பட மறுக்கிறார்.
கோச்சாகவே மாறிய ஆடுகளம் நரேன், கம்பி கிழித்துவிடுமோ என மரக்கதவு மாட்டும் அப்பா ஜெயபிரகாஷ், சிவந்த கண்களுடன் மிரட்டும் வில்லன் ஆர்.என்.ஆர் மனோகர், நேர்மையை ஐ.டி.கார்டாக தொங்கவிட்டிருக்கும் திருமுருகன், ஹீரோவுக்காக சட்டத்தை வளைத்து தனது துப்பாக்கியையே தரும் சினிமா போலீஸ் அதிகாரி செல்வா என பலரும் அழகான ஹாலில் ஆங்காங்கே இருக்கவேண்டிய சாதனங்களை போல கச்சிதமாக அமர்ந்திருக்கிறார்கள். ‘நான் பிடிச்ச மொசக்குட்டியே’ என இசையை அழகாகவே கடை விரித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
ஆக்சன் படம் என்றால் சில ஓட்டைகளும் லாஜிக் மீறலும், சில க்ளிஷேக்களும் இருக்கும் தானே..? இதிலும் இருக்கிறது.. ராங் நம்பர் காதல், தேவையானவர்கள் தேவைப்பட்ட நேரத்தில் டக் டக்கென சந்தித்து கொள்வது, கோயம்பேட்டில் இருப்பவனே அண்ணா நகருக்குள் அட்ரஸ் கண்டுபிடிக்க திணறும்போது, தஞ்சாவூர் அதர்வா சென்னை ஆட்டோ ட்ரைவர் மாதிரி நினைத்த பக்கமெல்லாம் ஈஸியாக வருவது, கையில் காயம்பட்டாலும், ரத்தம் வழிய ஓடும் ஹீரோ முதல் ஆளாக ஜெயிப்பது என பலதும் இருக்கிறது..
இருந்தாலும், கனம் குறைந்தாலும் கடைசிவரை ஈட்டியின் கூர்மை மழுங்காமலேயே இருக்கிறது. அதுதான் ரவி அரசுக்கும் அதர்வாவுக்கும் கிடைத்த வெற்றி.