ஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்


இதேநாளில் வெளிவந்திருக்கும் இன்னொரு பேய்ப்படம்.. ஆனால் இதற்கு காமெடி முலாம் பூசி ஓரளவு ரசிக்கும்படி படமாக்கி இருக்கிறார்கள்.

சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடும் வைபவ், விடிவி கணேஷின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை காதலிக்கிறார்.. இந்நிலையில் ஒருநாள் பைக்கில் சென்ற ஓவியா விபத்தில் சிக்கி பலியாக, கீழே கிடந்த அவரது செல்போனை சுட்டுக்கொண்டு வருகிறார் வைபவ்.. அன்றைய தினம் விடிவி கணேஷ், அவரது தம்பி சிங்கப்பூர் தீபன் இருவரும் சேர்ந்து வைபவின் வீட்டில் தங்குகிறார்கள்.. வைபவ் வைத்திருக்கும் தனது செல்போன் மூலம் அவர்களை டார்ச்சர் செய்யா ஆரம்பிக்கிறது ஓவியாவின் ஆவி.

தனது நிறைவேறாமல் போன காதலை சொல்லி, இன்னொரு பெண்ணை மணந்துகொண்ட தனது காதலன் கருணாகரனை அழைத்து வரச்சொல்லி, அதற்கு பணயமாக ஐஸ்வர்யா ராஜேஷை பிடித்து அவர்மேல் இறங்குகிறது ஓவியாவின் ஆவி.

மந்திரவாதிகள் மூலம் முயற்சி செய்தும் ஓவியாவை ஒன்றும் செய்யமுடியாததால், வேறு வழியின்றி கருணாகரனை அழைத்து வந்து பேயின் முன் நிறுத்துகின்றனர்.. பேய் முன்வைக்கும் வினோத கோரிக்கையை கேட்டு கருணாகரன் உட்பட அனைவரும் ஷாக்கானாலும், அவரது மனைவி பேயின் டீலுக்கு ஒப்புக்கொள்கிறார். அப்படி என்ன டீல் அது.? அதற்கு அவர் ஏன் ஒப்புக்கொண்டார் என்பது க்ளைமாக்ஸ்.

வைபவ், விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன் கூட்டணி படம் முழுவதும் நம்மை கலகலக்க வைக்கிறார்கள்.. போதாக்குறைக்கு ஆரம்பத்தில் யோகிபாபுவும், இறுதியில் கருணாகரணும் சிங்கம்புலியும் சேர்ந்துகொண்டு களைகட்ட வைக்கிறார்கள். இடைவேளை வரை சாதாரண ரோலில் பயணிக்கும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு, இடைவேளைக்குப்பின் நடிப்பில் வெரைட்டி காட்டும் வாய்ப்பு கிடைக்க, சரியாக பயன்படுத்தியுள்ளார்.. கவர்ச்சிப்பேயாக வரும் ஒவ்யா நன்கு மிரட்டவும் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸில் காமெடி நடிகை மதுமிதா அசத்துகிறார்.

பேய்க்கதை என்றாலும் அதில் சீரியசை குறைத்து காமெடி ட்ராக்கிலேயே படம் முழுதும் பயணிக்கிறது திரைக்கதை.. சித்தார்த் விபினின் இசையும் பானு முருகனின் ஒளிப்பதிவும் படத்தின் காமெடி மூடை தக்கவைக்கின்றன.. இந்தப்படத்தில் பேய்காட்சிகள், மாறும் கதைக்கான அழுத்தம் குறைவாகவே கொடுக்கப்பட்டு இருந்தாலும், முழுதாக ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்..