சிம்புவை வைத்து படம் இயக்கிய கௌதம் மேனன் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.. அதை பெரிய அளவில் கோபமாக அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லைதான். ஆனால் தமிழ் சேனல்களுக்கு அவ்வளவாக இண்டர்வியூ கொடுக்காத கௌதம் மேனன் சமீபத்தில் ஓணம் பண்டிகையின்போது மலையாள சேனல் ஒன்றிற்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்திருக்கிறார்.. அப்போது சிம்புவின் மானத்தையும் வாங்கியுள்ளார்.
அவரை பேட்டி எடுத்தது கூட யாரோ ஒருவர் அல்ல.. அவர் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஹீரோயினான மஞ்சிமா மோகன் தான். பேட்டி மலையாள சேனலில் தான் என்றாலும் கௌதம் மேனன் வழக்கம்போல பேசியதென்னவோ முக்கால்வாசி நேரம் ஆங்கிலத்தில் தான். அப்போது கௌதம் மேனனிடம் சிம்பு, தனுஷ் இருவரையும் வைத்து படம் இயக்கி வருகிறீர்களே உங்களது அனுபவத்தில் இருவரைப்பற்றிய மதிப்பீடு என்ன மஞ்சிமா கேட்டார்..
அதற்கு கௌதம் மேனன் சொன்னார் பாருங்கள் ஒரு பதில்.. “இரண்டு பேருமே ‘ரா’வானவர்கள்.. அவர்களை நமக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.. சினிமாவை நன்றாக கற்று வைத்திருப்பவர்கள்.. இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் தனுஷ் சொன்ன நேரத்திற்கு வருவார்.. சிம்பு சொன்ன நேரத்திற்கு வரமாட்டார்.. அவ்வளவுதான்” என சிம்பு மீதான தனது நீண்ட நாள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மலைகள் கடந்தும் சிம்பு புகழ் பரவுகிறது.