குண்டுப்பெண்ணான அனுஷ்கா, குண்டு என்பதாலேயே கல்யாண மார்க்கெட்டில் விலை போகாமல் நிற்கிறார் டாக்குமென்ட்ரி படம் எடுக்க வரும் ஸ்லிம் ஆர்யா, தன்னை பெண் பார்க்கவரும்போது ஈகோவால் அவரை வேண்டாம் என மறுத்துவிட்டு, பின் போகப்போக அவர்மேல் காதலாகிறார் அனுஷ்கா.
இடையில் காதலுக்கு குறுக்கே ஸ்லிம் வில்லியாக சோனல் சவுகான் உள்ளே நுழைய, பதிலுக்கு தானும் உடம்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் அனுஷ்கா.. சைஸ் ஜீரோ என்கிற பெயரில் ஒரே மாதத்தில் உடம்பை குறைக்கலாம் என ஏமாற்றும் பிரகாஷ்ராஜிடம் காசை கொடுத்து, ஏமாந்து பின் அவரின் போலித்தனத்தை ஆர்யாவுடன் சேர்ந்து தோலுரிக்கிறார்..
அனுஷ்காவின் உடல் மெலிந்ததா..? ஆர்யாவுடன் காதல் கைகூடியதா என்பது க்ளைமாக்ஸ்.
அனுஷ்காவுக்காகவே ஒரு முழுப்படத்தையும் பார்க்க முடியுமா..? முடியும் என காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் அழகு அனுஷ்கா. ஆனால் கதைதான் அவருக்கு தோதாக நகர மறுக்கிறது. குண்டுப்பெண்ணாக வரும் அவர்தான் காமெடி ஏரியாவையும் சேர்த்து கவர் பண்ணுகிறார். ஒரு குண்டான பெண்ணுக்கு இருக்கும் மன உளைச்சல்கள் அனைத்தையும் சரியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்..
டிவில காட்டுற எந்த விம்பர புராடக்ட்டுமே உங்க உடம்பை குறைக்காது.. உடற்பயிற்சிதான் சரியான ரூட் என ஸ்லிம் பிட் சீமானாக வரும் ஆர்யா கிளாஸ் எடுக்காத குறைதான். சோனல் சவுகான் தேவையே இல்லாத இடத்தில் ஆர்யாவுக்கு லிப் கிஸ் அடித்து கிக் ஏற்றுகிறார். மோ(ச)டி மஸ்தானாக பிரகாஷ் ராஜ் அவர் பங்கை குறைவிலாமல் செய்திருக்கிறார்.. ரொம்பவே டீசன்ட்டான வில்லத்தனம்.
ஊர்வசி, மாஸ்டர் பரத், பிரமானந்தம், அலி என மிக குறைவான ஆட்களையே பயன்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார்.. உடற்பயிற்சி எடுக்கும் கிளாஸுக்குள் நுழைந்துவிட்டோமோ என அவ்வப்போது எழும் எண்ணத்தை இறுதியில் நடிகர்கள் தோன்றி கலோரியை குறைக்கும் டிப்ஸ் கொடுக்கும்போது உண்மைதான் என உறுதிப்படுத்துகிறது. க்ளைமாக்ஸை இழு இழு என இழுக்கும் படங்களுக்கு இனி வரிவிலக்கு கிடைக்காது என புதிதாக ஒரு சட்டம் கொண்டுவந்தால் தேவலை.
கதையாசிரியான கனிகா கொவேலமுடி, சினிமாவுக்கு எப்படி கதை எழுதவேண்டும் என்பதை அவரது மாமனாரிடம் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த முயற்சியை தொடரலாம். இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் தெலுங்கு ஆடியன்ஸை மனதில் வைத்து கதை பண்ணி, தமிழின் வியாபார எல்லைக்காக சமரசம் செய்திருக்கிறார். அது படம் முழுதும் நான்-சிங்க் ஆகவே இருக்கிறது.