சொந்தக்காசில் போர் போட்டுத்தந்தவர் வழிப்பறி செய்தார் என்றால் நம்புற மாதிரியா இருக்கு..?


நடிகர் கஞ்சா கருப்பு, அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் புலிமலைப்பட்டியில் நீதிதேவன் என்பவரின் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தி விட்டு ஒரு குழு வந்துள்ளது.

அவர்களை வழிமறித்த கஞ்சா கருப்பு உள்ளிட்டோர், அவர்களை மிரட்டி ஆறரை சவரன் நகையை பறித்து விட்டதாகவும், சம்பவம் நடந்த போது கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிதேவன் கீழவளவு போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் சிவகங்கை மாவட்ட மதகுபட்டியில் நீதிதேவன் குழுவினர் மீது கஞ்சா கருப்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த வருடம் வேல்முருகன் போர்வேல்ஸ் என்கிற படத்தை தயாரித்த கஞ்சா கருப்பு சொந்தமாகவே ஒரு போர்வெல் வண்டியை வாங்கி படப்பிடிப்பு நடத்தியதோடு, படப்பிடிப்பு நடத்திய பல ஊர்களில் தனது கைக்காசை செலவழித்து போர் போட்டு தந்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அவ்வப்போது படித்திருப்பீர்கள்..

அதுமட்டுமல்ல.. கஞ்சா கருப்புவின் மனைவி ஒரு கௌரவமான டாக்டர் பொறுப்பில் இருப்பவர். கஞ்சா கருப்புவும் புகழ்பெற்ற நடிகர்.. இவர் பப்ளிக்காக நகையை வழிப்பறி செய்தார் என்று சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது..?