கணிதன் – விமர்சனம்


போலியான கல்விச்சான்றிதழ்கள் மூலம் நடக்கும் அநியாயங்களை தோலுரித்துக்காட்ட வந்திருக்கும் படம் தான் இந்த ‘கணிதன்’.

சாதாரண சேனல் ஒன்றில் வேலைபார்க்கும் அதர்வா, தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பிபிசி சேனலுக்கு ரிப்போர்ட்டர் வேலைக்கு அப்ளை பண்ணுகிறார்.. நேர்முக தேர்விலும் செலக்ட் ஆகிறார். ஆனால் பாஸ்போர்ட் விஷயமாக அவரது சான்றிதழை பரிசோதிக்கும் போலீஸார் அவர் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிறையில் தள்ளுகிறார்கள்..

நல்ல போலீஸ் அதிகாரியான் பாக்யராஜின் துணையுடன் வெளிவரும் அதர்வா இந்த மோசடியில் ஈடுபட்டு தன்னை இந்த அவல நிலைக்கு தள்ளிய கும்பலை எப்படி கண்டுபிடிக்கிறார்..? அவர்களை எப்படி நூதனமாக வேரறுக்கிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.

அப்பாவின் கனவை நிறைவேற்றும் சென்டிமென்ட், காதலியுடன் காட்டும் ரொமான்ஸ், தனது எதிர்காலத்திற்கு உலைவைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உக்கிரம் என பல பணிகளை, குருவி தலையில் பனங்காய் தான் என்றாலும் சிறிதும் பழுதில்லாமல் சுமந்திருக்கிறார் அதர்வா. காட்சிகளின் வேகமும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

நாயகி கேத்தரின் தெரசா, தோழிகளை எல்லாம் அறைக்குள் வைத்துக்கொண்டு காதலனிடம் குறும்பு செய்யும் வழக்கமான டிபிகல் நகரத்துப்பொண்ணாக கொடுத்த வேலையை செய்துள்ளார். ஆடுகளம் நரேன், பாக்யராஜ், வில்லன் தருண் அரோரா என துணை கதாபாத்திரங்கள் ஆங்காங்கே பக்கபலமாக இருந்தாலும் அதர்வாவின் பொறுப்புதான் அதிகமாக இருக்கிறது..

தமிழ்ப்படம் தான் என்றாலும் இந்தி, தெலுங்கு இரண்டுக்கும் ஏற்றதொரு இசையை மிக்ஸ் செய்து காதுகளில் அடிகொடுக்கிறார் ட்ரம்ஸ் சிவமணி. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் நல்ல மெனக்கெடல் தெரிகிறது.. ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர் என்பதாலோ என்னவோ இயக்குனர் டி.என்.சந்தோஷ் படத்தில் மைண்ட் கேம் என்று சொல்லத்தக்க வகையில் ஒரு ஆடு புலி ஆட்டத்தை ஆடியுள்ளார்.. அந்த ஆட்டம் தான் படத்திற்கு பலம்.

மொத்தத்தில் கூட்டிக்கழித்து பார்த்தால் இந்த கணிதன் பர்ஸ்ட் கிளாஸில் பாஸாகியுள்ளான்.