கரையோரம் – விமர்சனம்


கோடீஸ்வரர் ராதாரவியின் இளைய மகள் நிகிஷா படேல்.. அப்பாவை மீறி தனது அக்காவின் காதல் திருமணத்தை இவர் நடத்தி வைக்க, வேதனையில் ராதாரவி உயிரை விடுகிறார்.. சில வருடம் கழித்து ஒரு மழைநாளில் அக்காவும், அவளது குழந்தையும் விபத்தில் இறக்க, அமைதி தேடி தனது தோழி இனியாவின் கடலோர கிராமத்திற்கு வருகிறார் நிகிஷா.

வந்த இடத்தில் லைட் ஹவுசில் தனியாக குடியிருக்கும் கட்டழகு வாலிபனான வசிஷ்டாவின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை காதலிக்க துவங்குகிறார் நிகிஷா.. இனியாவுக்கு இந்த காதல் விவரம் தெரியவர, அப்படி ஒரு ஆளே இப்போது இல்லை.. அவன் இறந்து பல நாட்களாயிற்று என பகீர் கிளப்புகிறார்..

அப்படியென்றால் ரத்தமும் சதையுமாக தான் தினசரி பார்த்து பழகிய நபர் யார், அவருக்குப்பின் இருக்கும் மர்மம் என கண்டறியும் முயற்சியில் நிகிஷா இறங்கும்போது, அவர் எதிர்பாராத திசையில் இருந்து அவரை ஆபத்து சூழ்கிறது.. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் படத்தின் கதை.

நிகிஷா படேல் குடும்ப குத்துவிளக்கு என்கிற அடைமொழியுடன் என்ட்ரியாகி போகப்போக கவர்ச்சி காட்சிகளில் ஜுரம் வர வைக்கிறார்.. செட் பிராப்பர்ட்டி போல இனியாவுக்கு வழக்கமான நம்பிக்கை துரோக வில்லி வேடம் தான் இதிலும்.. கிளைமாக்ஸில் போலீஸ் அதிகாரியாக ஒரே ஒரு சண்டைக்காட்சியில் என்ட்ரி ஆகும் சிம்ரன் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை போக்குகிறார். சிம்ரனும் இருக்கிறார் என்பது மட்டும் இன்னொரு ஆறுதல்.

ஓங்குதாங்கான உடல்வாகுடன் ஆண்டி ஹீரோவாக நடித்துள்ள வஷிஸ்டா ஓரளவு வசீகரிக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் ராதாரவி கேரக்டர் மனதில் நின்று விடுகிறது. ஜெய் ஆனந்தின் ஒளிப்பதிவு கடலோர கிராமத்தில் கொஞ்ச நாள் வசித்த உணர்வை தருவதென்னவோ உண்மை…

படத்தின் இயக்குனர் ஜே.கே.எஸ் மிகுந்த திறமைசாலி.. பின்னே கிட்டத்தட்ட கடற்கரை கிராமம் என்கிற ஒரே லொக்கேஷனை வைத்துக்கொண்டு (க்ளைமாக்ஸ் பைட் மட்டும் பின்னி மில்) ஒவ்வொரு காட்சியையும் ஐந்து நிமிடங்களுக்கு குறையாமல் லைட் ஹவுஸ், கெஸ்ட் ஹவுஸ் என ஒரே இடத்தில் இழுத்து இழுத்து படமாக்க ஒரு தனித்திறமை வேண்டும் தானே.. அதற்கேற்ப படத்தின் கதையிலும் புதுமை என எதுவுமில்லை…. த்ரில்லிங்காக உருவாக்கி இருக்கவேண்டிய படத்தை வெகு சாதாரணமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜே.கே.எஸ். வேறென்ன சொல்ல..?