விவசாய படிப்பை முடித்துவிட்டு தஞ்சை மாவட்டத்தில் தன்னுடைய கிராமத்திலேயே விவசாயம் பார்த்து வருபவர் நரேன்.. மீத்தேன் திட்டத்திற்காக விலை நிலங்களை ஆய்வு செய்ய வருபவர்களையும், இன்னொரு பக்கம் அவற்றை பட்டா போட்டு வீட்டு மனைகளாக்க வருபவர்களையும் உள்ளே நுழைய விடாமல் அடித்து விரட்டுகிறார்.
இந்தநிலையில் நாற்பது வருடமாக அரசியல் கட்சி ஒன்றில் சிறுசிறு பொறுப்புகளில் நேர்மையாக இருக்கும் அவரது அப்பா ஜெயராஜ், தேர்தலில் எம்.எல்.ஏவாக நிற்க சீட் கேட்கிறார்.. ஆனால் இளைஞர்களுக்குத்தான் சீட் என்கிற அடிப்படையில் அவரது மகன் நரேனுக்கு கிடைக்கிறது.
எதிரணியிலோ வயது மூத்தவர் என்பதால் ஏற்கனவே இருந்த சிட்டிங் எம்.எல்.ஏ ஞானவேலுக்கு அவரது கட்சி சீட் கொடுக்க மறுத்து, அவரது எதிராளியின் மகனுக்கு சீட் கொடுத்து, அவரை ஜெயிக்க வைக்க உத்தரவிடுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்த ஞானவேல் தனது சாணக்யத்தனத்தை நரேனுக்கு எதிராக பயன்படுத்தி, வாக்காளர்களை திசைதிருப்புகிறார்.. வெற்றி யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.
ஆக்ரோஷமும், அதேசமயம் ஜாலியும் கலாட்டாவும் நிரம்பிய கிராமத்து இளைஞராக நரேனுக்கு இது புது அவதாராம். விவசாயத்துக்காக மண்ணை காப்பற்ற நினைக்கும் அவரது குணம் அந்த கேரக்டரை இன்னும் மெருகேற்றுகிறது. படம் முழுவதும் சூரியுடன் சேர்ந்து பண்ணும் கலட்டாக்களும் ஜாலி ரகம் தான்.
எறும்புகளுக்கு கூட தீங்கு நினைக்காத கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே மனதில் ஒட்டிக்கொள்கிறார். ஐவரும் தன பங்கிற்கு ஊருக்குள் செல்போன் டவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கேரக்டரை உயர்த்துகிறார். தன் தந்தையின் தற்கொலைக்கு தங்கள் காதல் தான் காரணம் என பொய்யாக செய்தி பரவும்போது, அதை நம்பாமல் கதாநாயகனை இன்னும் போராட தூண்டும்போது சபாஷ் சொல்லவைக்கிறார்.
நரேனுக்கு சமமாக படம் முழுவதும் வரும் சூரி, கலகலப்பிற்கான மொத்த பொறுப்பையும் தன் கையில் எடுத்துக்கொள்கிறார். நரேனின் வீட்டில் சாப்பாட்டுக்காக காத்துக்கிடப்பது, போலீசாரிடம் அடிவாங்குவது, என காட்சிக்கு காட்சி இன்னொரு ஹீரோ என சொல்லும்படி தனது இருப்பை தக்கவைத்திருக்கிறார்.
மாவட்ட செயலாளராக வரும் ஞானவேல் கதாபாத்திரம் படத்தின் மிக முக்கியமான தூண்.. எதிரியின் ஜாதகத்தை பார்த்துவிட்டு, அவனுக்கு சீட் கிடைக்காது என தெரிந்து நடுரோட்டில் குத்தாட்டம் போடுவது. விருப்பமே இல்லாமல் கட்சி சொன்னதற்காக எதிரியின் மகனுக்கு தேர்தல் வேலைபார்ப்பது, கடைசியில் அவனையே கவிழ்ப்பது என பக்க அரசியல்வாதியாக தெரிகிறார்.
நரேனின் அப்பாவாக வரும் ஜெயராஜ் நேர்மையும், அதேசமயம் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என குமுறுவதும், பின் மகனுக்காக தேர்தலில் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பதுமாக நிறைவு தருகிறார். அதிரடியாக தனது மகனுக்கு பெண்கேட்டு போகும் நரேனின் அம்மா துளசியும் நம்மை ஈர்க்கிறார். சிருஷ்டியின் தந்தையாக வரும் ராஜா, மீத்தேன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து, அதற்காக தனது உயிரையே தியாகம் செய்யும் காட்சியில் மனதை கனக்க வைத்து விடுகிறார்.
புதியவர் அருள்தேவின் இசை கிராமத்து மண்ணோடு ஒட்ட முயற்சி செய்திருக்கிறது. தஞ்சை மண்ணின் அழகையும் அழகையும் மீத்தேன் திட்டத்தால் அது பாழாகிப்போகும் அபாயத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது சந்தோஷ் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு..
அறிமுக இயக்குனர் ரா.சரவணன், இந்த மண்ணுக்கு நியாயம் செய்யும் ஒரு ஜீவாதார போராட்டத்தை கையில் எடுத்து அதை படமாக்கியிருப்பதற்காகவே அவரை பாராட்டவேண்டும். அதை சீரியசாகவே சொல்லமால், படம் முழுக்க நகைச்சுவையையும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார். விவசாயிகளின் பட்டினிச்சாவுக்கு அவர் தரும் விளக்கம் நெத்தியடி. இடைவேளைக்கு பின் தொடரும் கதை க்ளைமாக்ஸ் வரைக்கும் தேர்தல் களமாகவே இருப்பது தான் சற்றே அயர்ச்சியை தருகிறது.
விவசாயத்தை நேசிக்க சொல்லியும், விவசாயத்திற்கு நேரப்போகும் அபாயத்தை எதிர்க்க சொல்லியும் குரல் கொடுத்திருக்கும் இந்தப்படம் நல்ல படங்களின் பட்டியலில் தாராளமாக இடம்பிடிக்கிறது.