இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ள படம்.. கதை செல்வராகவன் என்பதாலோ என்னவோ படமும் அவரது வழக்கமான பிளேவரில் தான் இருக்கிறது.
படத்தின் நாயகன் பாலகிருஷ்ணன் படித்த, வசதியான ஆனால் பெண்வாசனையே அறியாத, பெண் நட்புக்கு ஏங்குகின்ற சராசரிக்கும் குறைவான அழகுள்ள இளைஞன். நாயகி, வாமிகா ஆண் நண்பர்களுடன் பழகுகிற, ஆனால் திருமணத்திற்கு முன் எல்லை மீற விரும்பாத நவநாகரீக பெண். ஒரு பக்கம் காதல் முறிவு, இன்னொரு பக்கம் அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக பாலகிருஷ்ணனை விருப்பமே இல்லாமல் மணக்கிறார் வாமிகா.
முதல் நாளே செக்ஸுக்கு தடை போடுகிறார் வாமிகா. சந்தேகம், விரக்தி என கலவையான உணர்வுகளால் அவரை மட்டுமல்லாமல் தன்னையுமே டார்ச்சர் செய்துகொள்கிறார் பாலகிருஷ்ணன்.. இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு கட்டத்தில் வாமிகா தன் கணவன் பால் மெதுவாக ஈர்க்கப்படுகின்ற நேரத்தில், அதையறியாமல் மது மயக்கத்தில் அவரை பாலியல் பலாத்காரம் செய்கிறார் பாலகிருஷ்ணன். இதன் விளைவுகள் இருவரது வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான் மீதிப்படம்.
சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ காலத்திலிருந்து மௌன ராகம், மேகம் கருத்திருக்கு உட்பட ஏற்கனவே நாம் பார்த்து ரசித்த பல படங்களின் சாரம் தான் இந்தப்படமும்.. அதை மாறிவரும் இந்த ஜெனரேஷனுக்கு ஏற்ப கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் கதாசிரியர் செல்வராகவனும், இயக்குனர் கீதாஞ்சலியும்.
படத்தின் மிக முக்கியமான பலம் என்றால் பாலகிருஷ்ணனும் வாமிகாவும் தான்.. மொத்தப்படத்தையும் இவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள்.. இவரா படத்தின் நாயகன் என ஆரம்பத்தில் அயற்சியை ஏற்படுத்தும் பாலகிருஷ்ணா, போகப்போக கதையோட்டத்துடன் தன்னை பிணைத்துக்கொள்வதால் அவரை நம்மால் ரசிக்க முடிகிறது.. இன்றைய பல அம்மாஞ்சி இளைஞர்களின் பிரதிபலிப்புதான் அவரது கதாபாத்திரம்.
நாயகி வாமிகாவின் ஆக்ரோஷமான நடிப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று.. ஆனால் சில இடங்களில் சில இடங்களில் முதிர்ந்த அழகியாகவும், அவரைவிட அவரது அம்மாவாக வரும் கல்யாணி நடராஜன் இளமையாகவும் தெரிகிறார்கள். ஏன், நாயகனின் அம்மா கூட இளமையாகவே இருக்கிறார்.. என்ன கதாபாத்திர வடிவமைப்போ..? செல்வராகவனுக்கே வெளிச்சம். குடும்பத்தலைவர்களாக வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே நிறைவு..
காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இல்லை ஒருத்தர் விரும்பி இன்னொருத்தர் விரும்பாத திருமணமோ, எதுவாக இருந்தாலும் எந்த மாதிரியான சூழலில் திருமணம் செய்துகொண்டாலும் ஒன்று சூழலுக்கு தக்கவாறு அனுசரித்து செல்லவேண்டும்,. இல்லையேல் ஆரம்பத்திலேயே தக்க முடிவை எடுத்துவிடவேண்டும் என்கிற ஒரு பாடத்தை தான் கொஞ்சம் நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்
பெண் இயக்குனர் படம் தான் என்றாலும் ஆங்காங்கே விரசமான பாலியல் மூவ்மெண்ட்ஸ், பீப் வார்த்தைகளை கொண்ட வசனங்கள் என இந்த ட்ரெண்டிற்கு இறங்கி அடிக்க முயற்சி செய்து அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறார் கீதாஞ்சலி..