வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு மரப்பாச்சி பொம்மைகள் விற்கவரும் குடும்பத்தை சேர்ந்தவர் வாய்பேச இயலாத சுகன்யா. வந்த இடத்தில் இவர்கள் தங்கியுள்ள கிராமத்தில் சகல அதிகாரங்களும் கொண்ட பண்ணையார் ஒருவரின் வீட்டில் வேலைக்கு சேர்கிறார்.. ராணுவத்தில் பணிபுரியும் பண்ணையாரின் மகன் முருகானந்தம் விடுமுறையில் ஊருக்கு வந்த நேரத்தில் ஒரு எசகுபிசகான சிச்சுவேஷனால் சுகன்யா மீது காதலாகிறார்..
இளஞ்சோடிகள் சுற்றி திரிவது ஒருமுறை பண்ணையார் கண்களில் பட்டுவிட, அவர் எம்.எல்.ஏ விடம் முறையிட, அவரும் உள்ளூர் போலீஸ் அதிகாரியை கூப்பிட்டு ‘பக்குவமாக’ சுகன்யாவை அப்புறப்படுத்த சொல்கிறார்.. முதல்முறை தப்பிக்கும் சுகன்யா, இன்னொரு இடத்தில் போலீஸ், எம்.எல்.ஏ & கோ விடம் சிக்க, இருவரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்யும் முயற்சியில் சுகன்யா உயிரை விடுகிறார்.
சுகன்யாவை காணாமல் முருகானந்தம் தேட, சுகன்யாவின் ஆவி அவர் வாங்கி வைத்திருக்கும் மரப்பாச்சி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது.. பிறகென்ன, தன்னை அழித்தவர்களை அந்த பேய் எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் மீதிக்கதை..
பேய்க்கதை தான் இன்றைய தேதியில் ஓஹோவென பிசினஸ் ஆகிறதே என மரப்பாச்சி பொம்மையை பேயாக மாற்றி அனுப்பியிருக்கிறார் இயக்குனர் முத்து மனோகரன்.. டைட்டிலுக்கேற்ற மாதிரி பேய் பழிவாங்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒருவிதத்தில் மரத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பது புதுசு.
கதாநாயகன் முருகானந்தம் புதியவர் என்பதால் நடிப்பில் தடுமாற்றம் தெரிகிறது. ராணுவ வீரருக்கான தோற்றம் இருந்தாலும் காதலிக்கும் வயதை எல்லாம் தாண்டிவிட்டதை அவரது முகம் காட்டிக்கொடுக்கிறது. அப்பாவியாக உயிரை பறிகொடுத்து, ஆவியாக வந்து உயிரை எடுக்கும் கேரக்டரை ஓரளவுக்கு ஈடுசெய்ய முயற்சித்திருக்கிறார் கதாநாயகி சுகன்யா.
பண்ணையார், போலீஸ் அதிகாரி, எம்.எல்.ஏ என துணை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அனைவரும் ஏதோ வந்தோம் போனோம் என்றுதான் நடித்து போகிறார்கள். பாலகணேஷின் இசையும் மரப்பாச்சியின் மிரட்டலுக்கு துணை நிற்கிறது. பட்ஜெட்டுக்குள் எவ்வளவு மிரட்டமுடியுமோ அதைமட்டும் செய்திருக்கிறார் இயக்குனர் முத்து மனோகரன்..