காதலித்தாலும் ஊரைவிட்டு ஓடிப்போகாமல் காதலில் ஜெயிக்கும் இந்து-முஸ்லீம் காதல் ஜோடியின் கதைதான் இந்தப்படம்.
இந்து இளைஞனான வால்டர் பிலிப்ஸ், முஸ்லீம் பெண்ணான இஷா தல்வாரை கண்டதும் காதல் கொள்கிறார்.. சில வழக்கமான, சில வித்தியாசமான முயற்சிகளுக்கு பிறகு அவரிடம் காதலை சொல்கிறார்.. சம்மதமும் பெறுகிறார். இஷாவின் வீட்டில் விஷயம் தெரியவர காதலுக்கு சிக்கல் எழுகிறது.. குடும்பத்துடன் ஊரைவிட்டே கிளம்பு முடிவெடுக்கிறார் இஷாவின் கண்டிப்பான பெரியப்பா நாசர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இஷாவை வால்டர் எப்படி கரம் பிடிக்கிறார் என்பதும் அப்படி என்ன அதிசயம் நடந்தது என்பதும் தான் மீதிக்கதை
மலையாளத்தில் வெளியான ‘தட்டத்தின் மறையத்து’ என்கிற சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் தான் இந்தப்படம்.. ஒரிஜினலின் அழகியல் கெடாமல் தமிழில் தர முயற்சி செய்திருக்கிறார் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட்டான இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர். ஆனால் அதற்காக ஒரிஜினலை அப்படியேவா எடுத்து வைப்பது..?
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் வால்டர் பிலிப்ஸ் துறுதுறுவென ரசிக்கவைக்கிறார். காதல், கோபம், விரக்தி என கலவையான உணர்வுகளை சரியாகவே வெளிப்படுத்துகிறார். துப்பாட்டாவுக்குள் ஒளிந்திருக்கும் இஷாவின் முகத்தை அவர் காதல் வழிய பார்ப்பது அழகு. கொஞ்சம் கவனம் எடுத்து அடுத்தடுத்த கதைகளை தேர்ந்தெடுத்தால் நல்ல எதிர்காலம் உண்டு.
ஏற்கனவே எழுதி வெற்றிபெற்ற தேர்வை மீண்டும் எழுதி இருக்கிறார் இஷா தல்வார்.. ‘ஆயிஷா’ கேரக்டரில் பாந்தமாக பொருந்துகிறார். வசனங்கள் குறைவு என்பதால் முகத்திலேயே உணர்வுகளை பிரதிபலிக்கும் கலை இஷாவுக்கு நன்றாகவே கைகொடுக்கிறது.
காதல் ஜோடியை தாண்டி நம் கவனத்தை ஈர்ப்பது கண்ணியமான, கம்பீரமான, காதலுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக வரும் மோஜ் கே.ஜெயன் தான் (மலையாளத்திலும் இவர்தான் இந்த கேரக்டரில் நடித்திருந்தார். அதிலும் ஹீரோவுக்கு ஹெல்மெட் விற்க உதவுவது சரியான டெக்னிக். இப்படி ஊருக்கு ஒரு போலீஸ் இருந்தால் காதலர்களுக்கு கவலையேது என ஏக்கப்படவும் வைக்கிறார். அவருடன் அவ்வப்போது சிரிப்பு வெடிகளை கொளுத்திப்போட்டு ரசிக்கவைக்கிறார் ஏட்டையா சிங்கமுத்து. நீண்ட நாட்கள் கழித்து தனது கேரக்டரில் உக்கிரமுகம் காட்டியிருக்கும் நாசர் பயத்தை ஏற்படுத்த, இஷாவின் தந்தையாக நடித்துள்ள தலைவாசல் விஜய் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
கதாநாயகனின் நண்பர்களாக வரும் அர்ஜுன், அல்தாப்பாக வரும் வெங்கட், வித்யுலேகா உட்பட அனைவரும் காதலுக்கு உதவும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்… கடற்கரை நகரத்தின் அழகையும், நகரத்து வீதிகளையும் அழகாக படம் பிடித்திருக்கிறது விஷ்ணு சர்மாவின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் இசையில் அடிக்கடி வரும் பாடல்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்து-முஸ்லீம் காதல் என்கிற பதட்டமான விஷயத்தை கையில் எடுத்து எந்தப்பக்கமும் கீறல் விழாமல் பக்குவமாக படமாக்கியிருக்கிறார் மித்ரன் ஜவஹர். ஆனால் முதல் பாதிவரை காதல் காட்சிகள் இழுவையாக நீள்வதை தயங்காமல் கத்திரி போட்டிருக்கலாம். குறிப்பாக கல்லூரி கலை நிகழ்ச்சி நடக்கும் அந்த கால்மணி நேர காட்சி நம் பொறுமையை சோதிக்கிறது. இடைவேளைக்குப்பின் நகரும் கதையில் குறை சொல்ல ஏதும் இல்லை.
காதலிப்பவர்களும், காதலிக்க ஆசைப்படுபவர்களும் தாராளமாக இந்தப்படத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.