முடிஞ்சா இவன புடி – விமர்சனம்


ரிலீஸ் நேரத்தில் பலவித சிக்கல்களை எல்லாம் தாண்டி வெளியாகியுள்ள படம் தான் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான ‘முடிஞ்சா இவன புடி’. ஒருவரே இருவராக நாடகமாடும் ஆள் மாறாட்ட கதை.. அதை தனது பாணியில் கமர்ஷியலாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்..

ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து அளவான பணத்தோடு நிறைவாக வாழ நினைக்கிறார் சுதீப்.. அதேசமயம் ராபின் ஹூட்டாக மாறி இருப்பவர்களிடம் கொள்ளையடித்து அனாதை ஆசிரமங்களுக்கு கொடுக்கிறார் இன்னொரு சுதீப். காதலி நித்யா மேனன், சந்தேகப்படும் போலீஸ் என அனைவரிடமும் தாங்கள் அண்ணன் தம்பி என்பதாக பதிவு செய்து நாடகமாடுகிறார் சுதீப்.. அவரின் இந்த இரட்டை வேட நாடகம் எதற்காக என்பதற்கு பதில் சொல்கிறது க்ளைமாக்ஸ்.

ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு உண்டான அத்தனை விஷயங்களும் கொண்ட சுதீப் தமிழ்சினிமாவுக்குள் நுழைய தகுதியானவர் என்பதை படத்தின் ஆரம்ப காட்சிகளே சொல்லி விடுகின்றன. ஆனால் சிறப்பான கதையும் விறுவிறுப்பான திரைக்கதையும் இல்லாவிட்டால் அதுவே கஷ்டத்திலும் கஷ்டமாகி விடும் என்பதையும் இந்தப்படம் சொல்லாமல் சொல்லி சொல்லியிருக்கிறது.

வழக்கமான அதி புத்திசாலி பொண்ணாக நித்யா மேனன்.. காதலனின் எளிமை கண்டு காதலாவது, அவனது மோசடி கண்டு வெறுப்பது என டிபிகல் கதாநாயகி தான். கன்னடப்படம் என சொல்லிவிடாதபடி சதீஷ், இமான் அண்ணாச்சி, லதாராவ் உள்ளிட்ட பலரும் காமெடி காட்சிகளால் இதை தமிழ்ப்படமாக்க மெனக்கெட்டு இருக்கிறார்கள்..

பிளாஸ்பேக்கில் வரும் பிரகாஷ்ராஜின் நடிப்பு வழக்கம்போல சோடை போகவில்லை. அனால் அநாதை ஆசிரம் பிளாஸ்பேக்கில் தான் நிறைய குளறுபடி.. அதேபோல வில்லன் போலீசாக வரும் சாய்ரவியாகட்டும், நல்ல போலீஸாக வரும் நாசராகட்டும் இரண்டுபேரையுமே சுதீப்பை கண்டுபிடிக்கும் விஷயத்தில் முட்டாளாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். அதிலும் சுதீப்பின் நாடகத்தை கண்டுபிடிக்கும் அந்த கேமரா காட்சி செம மொக்கை.. மூன்று படாபடா வில்லன்களும் புஸ்வாணமாகி போகிறார்கள்.

இமானின் இசையில் பாடல்கள் நம்மை சோதிக்கவில்லை. அதேசமயம் முணுமுணுக்கவே வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் ராஜரத்தினத்தின் கேமரா வேகத்துக்கு திரைக்கதி ஈடுகொடுக்கவில்லை என்பதும் நன்றாகவே தெரிகிறது.. ஆள் மாறாட்ட கதையில் இருக்கும் எந்த வித சுவாரஸ்யங்களும் இந்தப்படத்தில் இல்லை என்பது மிகப்பெரிய பலவீனம்.. கதாசிரியர் சிவகுமார் கதை சொல்லும்போது, கே.எஸ்.ரவிகுமார் தான் ஏற்கனவே இயக்கிய வில்லன் படத்தின் சாயல் நிறைய இடங்களில் இருப்பதை எப்படி கவனிக்காமல் விட்டார் என தெரியவில்லை..

குறைவான வேகத்திலேயே செல்கிறான் – முடிஞ்சா இவன புடி