சில தினங்களுக்கு முன் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘பட்டதாரி’ என்கிற படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அறிமுக இயக்குனரும் மு.களஞ்சியத்திடம் கொஞ்ச நாள் பணியாற்றியவருமான சங்கர் பாண்டி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிலேயே சில புதுமைகளை செய்தார்கள்..
அதாவது கதாநாயகன், நாயகியை விழாவுக்கு அழைக்கவே இல்லை.. ஒளிப்பதிவாளருக்கும் இணை இயக்குனருக்கும் கூட முதல் நாள் தான் போனில் அழைப்பு சொல்லப்பட்டதாம். பாடல்களை வீடியோ வடிவில் திரையிட்டு காட்டாமல் வெறுமனே நான்கு ஸ்டில்களை வைத்து எடிட்டிங் மூலம் ஒப்பேற்றி இருந்தனர்..
இத்தனைக்கும் படத்தின் கதாநாயகி புகைப்படம் அடங்கிய போஸ்டர் தான் அந்தபடத்துக்கே ஹைலைட்டாக இருந்தது. அன்று சென்னை முழுதும் கலக்கியது. ஆனால் அப்படிப்பட்ட கதாநாயகியையே மேடையேற்றாமல் அப்படி என்ன விழா.? அதை ஏன் நடத்த வேண்டும் என விழாவுக்கு வந்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவாவே கடிந்துகொண்டதையும் பார்க்க முடிந்தது..
இது அனைத்துக்கும் பின்னணியில் இருப்பவர் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தானாம். இவர் கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகம் மாதிரி, முதலில் மற்ற பாடலாசிரியர்களை தூக்கி விட்டு தனக்கு வேண்டிய ஒரே நபருக்கு அனைத்து பாடல்களையும் கொடுத்தாராம். தனக்கு டைரக்சன் தெரியும் என சொல்லிக்கொண்டு படப்பிடிப்பில் நடிகர் நடிகைகளையும் டார்ச்சர் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பாடல் காட்சிகள் வீடியோவாக முழுமை பெறாமல் இசைவெளியீட்டு விழா நடத்த நச்சரித்ததும் இவர்தானாம்.
காரணம் வீடியோவாக ஒளிபரப்பினால் காட்சிக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும்.. தனது பாடலுக்கு கிடைக்காது என்பதுதான் இவரது எண்ணமாம். மேலும் பீல்டு அவுட் ஆகியுள்ள இவர் மீண்டும் பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே இயக்குனரை கைக்குள் போட்டுக்கொண்டு இசை வெளியீட்டு விழாவை அரைகுறையாக நடத்த வைத்துவிட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள் படக்குழுவினரில் சிலர்.