தாதா பார்த்திபன் நயன்தாராவின் அப்பா, அம்மாவை கொன்றுவிடுகிறார். அவரை பழிவாங்கவேண்டும் என்பதற்காக ரௌடி போல உதார்விடும் விஜய்சேதுபதியின் உதவியை நாடுகிறார் நயன்தாரா.. விஜய்சேதுபதி பார்த்திபனை வதம் செய்தாரா, நயன்தாராவை மணம் செய்தாரா என்பது தான் மொத்தப்படமும்.
படம் முழுக்க விஜய்சேதுபதி காமெடி ரௌடியாகவே வருகிறார். அதில் கச்சிதமாக பொருந்தவும் செய்திருக்கிறார். சின்னபையன்களுக்கு காதல் பஞ்சாயத்து செய்வதில் ஆரம்பிக்கும் இவரது அட்ராசிட்டி, லோக்கல் ரவுடி ஆனந்தராஜ் அன் கோவுடன் சேந்து கலாட்டா பண்ணுவதிலும், உண்மையான ரௌடி பார்த்திபனிடம் போனில் சலம்பிவிட்டு நேரில் பம்முவது வரைக்கும் நான்ஸ்டாப்பாக தொடர்கிறது..
காது கேளாத நயன்தாராவுக்கும் இவருக்குமான உரையாடல் ஒருவித ஹைக்கூ.. நயன்தாராவுக்கு இதுவரை பண்ணியிராத அசத்தல் ரோல் தான் என்பதால் அசால்ட் பண்ணியிருக்கிறார். காது கேளாமல் சிரமப்படுவதும், விஜய்சேதுபதியால் சின்னசின்னதாக ஏமாற்றப்படும்போதெல்லாம் பரிதாப முகம் காட்டுவதுமாக ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார் நயன்தாரா..
இவர் ஒரிஜினல் ரவுடியா, காமெடி ரவுடியா என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பார்த்திபன் கொலையும் பண்ணுகிறார். எதிரிக்கு பயந்து ஓடவும் செய்கிறார்.. அதேசமயம் வழக்கமான நக்கலுக்கும் நையாண்டிக்கும் எந்தக்குறையும் வைக்காமல் ஜமாய்த்திருக்கிறார் பார்த்திபன். இவர்கள் தவிர ராதிகா, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், ராஜேந்திரன் உட்பட அனைவரும் அளவாக வந்து போனாலும் அவர்கள் பங்கிற்கும் நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்..
இந்தமுறை அடக்கி வாசித்து கருத்தான காமெடி டயலாக்குகளை தேவையான நேரத்தில் பயன்படுத்தியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி சபாஷ் சொல்லவைக்கிறார்.. அட ராகுல் தாத்தா என்கிற பெயரில் தாத்தா ஒருவரும் இந்த கூட்டத்தில் அசத்தியிருப்பது ஆடியன்ஸுக்கு சர்ப்ரைஸ் கிப்ட். அனிருத்தின் இசை வழக்கம்போல தான்..
படத்தை கொஞ்சம் கூட ஆக்சன் மோடிற்கு நகர்த்தாமல் கடைசிவரை காமெடியிலேயே ட்ராவல் பண்ணியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. அது அதுதான் படத்திற்கு ப்ளஸ்ஸாகவும் குறிப்பாக ஒவ்வொரு நடிகர்களையும் அவர் வேலை வாங்கியிருக்கும் விதம் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறது. ஆக, இந்த ரௌடி தியேட்டருக்கு வருபவர்களை இரண்டுமணி நேரம் சிரிக்க வைத்து அனுப்புகிறான் என்பது உண்மை.
Rating – 7/10