நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் – விமர்சனம்

பொற்பந்தல் கிராமத்தில் யாராவது, தங்களது நகையை தவறவிட்டால் அதை தவறவிட்டவர் எடுக்கும்வரை அப்படியே தான் கிடக்கும்.. திருட வந்தவனுக்கு கால் ஒடிந்துவிட ஊரே சேர்ந்து வைத்தியம் பார்க்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஞாயிறானால் வார விடுமுறை விடுகிறார்கள்.. தொடர்ந்து ஐந்து முறை நல்ல கிராமம் என ஜனாதிபதி விருதும் வாங்கியுள்ளது..

குற்றமே நடக்காத இப்படிப்பட்ட கிராமத்தில் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு என அதை மூட உத்தரவிடும் மேலிடம் அதில் டூட்டி பார்க்கும் அருள்நிதி, சிங்கம்புலி, பகவதி பெருமாள், ராஜ்குமார் நால்வரையும் கலவர பூமியான ராமநாதபுரத்திற்கு மாற்ற உத்தரவிடுகிறது.

ஆனால் அங்கே செல்ல விருப்பமில்லாத இந்த நால்வர் டீம், நம்ம ஊர் ஸ்டேஷனில் வழக்குகள் வர ஆரம்பித்தால் அந்த ஊரிலேயே ஸ்டேஷனை மூடமால் இருந்துவிடலாம் என நினைத்து ஊருக்குள்ளேயே சின்ன சின்னதாக பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக பிரச்சனை பெரிதாகி, ஒருதாய் பிள்ளைகளாக பழகிய மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு ஊரையே ரத்தக்காடாக மாற்றுகின்றனர்.. நிலைமை கட்டுக்கடங்காமல் போக அதிரடிப்படையினர் கைக்குள் கிராமம் வருகிறது. இறுதியில் கிராமத்தின் நிலை என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

குற்றமே நடக்காத ஊரும் யாருடைய பொருளுக்கும் ஆசைப்படாத வஞ்சகமில்லாத ஜனங்களுமாக பொற்பந்தல் கிராமத்தை காட்டும்போதே ஆஹா என ஒரு சுவராஸ்யம் தட்டுகிறது. கூடவே நம்ம ஊரும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்கிற ஏக்கமும் ஏற்படவே செய்கிறது.

காமெடி, கொஞ்சம் சீரியஸ் கலந்த சாதா போலீஸாக அருள்நிதி கேரக்டர் ஒகே ரகம் தான். ஆனால் அவர் பாட்டுக்கு பள்ளிக்கூட டீச்சரான ரம்யா நம்பீசனை காதலிக்க கிளம்பிவிட, படத்தின் முக்கிய கேரக்டரை ஏட்டையாவாக வரும் சிங்கம் புலி படம் முழுவதும் எடுத்துக்கொள்கிறார். கிராமத்தை விட்டு போகாமல் இருக்க செய்யும் தகிடுதத்தங்கள், பிற்பாடு தாங்கள் செய்த சின்னச்சின்ன தவறுகளே கிராமத்தை சின்னாபின்னமாக்குவது கண்டு மருகுவது என் காமெடி, குணச்சித்திரம் இரண்டிலுமே சிக்சர் அடிக்கிறார் சிங்கம்புலி.

பகவதி பெருமாளும் சிங்கம்புலியுடன் சேர்ந்து காமெடியில் அவ்வப்போது சிங்கிள் ரன் தட்டுகிறார்.. நான்காவது போலீஸான ராஜ்குமாருக்கு பெரிதாக வேலையில்லை. தெருவிளக்கு எரியவில்லையென்றால், யாரையும் எதிர்பார்க்காமல் தானே போஸ்ட்டில் ஏறி சரிபார்க்கும், சாக்கடை அடைப்பை தானே இறங்கி சுத்தம் செய்யும் ஊர் பஞ்சாயத்து தலைவராக வரும் ‘களவாணி’ திருமுருகன் கதாபாத்திரம் நம்மை மீண்டும் ஏக்கப்பெருமூச்சுவிட வைக்கிறது.

மளிகை கடை அண்ணாச்சியாக வருபவரும் எதார்த்த நடிப்பால் நம்மை கவருகிறார். சித்தன் மோகன் தனது ஊருக்கு வரும் சிங்கப்போர் மருமகைன்டம் ஊர்ப்பெருமையை காட்டி பேசுவதும், பின்னாளில் அதே மாப்பிள்ளை மனைவியுடன் வரும்போது சந்திக்கும் அனுபவங்களும் அசால்ட் காமெடி.

ஆனால் இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் யோகிபாபு. கிராமத்துக்கு திருட வந்து மக்களின் அன்பால் திருந்துவதாகட்டும், போலீஸ் மீண்டும் திருடச்சொல்லும்போது மறுப்பதாகட்டும், எதிர்பாராத நேரத்தில் அவர்கள் சொன்னபடி திருடி ஊரையே ரத்தக்காடாக மாற்றுவதாகட்டும், கடைசியில் மிகப்பெரிய கொள்ளைக்காரனாக மாறிப்போவதாகட்டும்.. யோகிபாபு அடுத்ததாக இளம் ஹீரோக்களின் நண்பனாக சோலோவாக காமெடி கூட்டணி அவைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

கலவர பூமியான ராமநாதபுரத்திற்கு மாறுதல் வாங்க பயந்து, இந்த நாலு போலீஸும் பண்ணிய குளறுபடியால், இறுதியில் அங்கே இருக்கும் போலீஸ் ஒருவர், அய்யய்யோ, பொற்பந்தல் கிராமத்துக்கு ட்ரான்ஸ்பரா என் கேட்கும் அளவுக்கு இந்த கிராமம் மாறிப்போவது காமெடியாக இருந்தாலும் கொஞ்சம் சுருக்கென தைக்கிறது. பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் யதார்த்தமாக முடித்திருப்பது குறையாக தெரிந்தாலும், தீர்வு சொல்லியிருந்தால் வழக்கமான படங்களின் பட்டியலில் இதுவும் சேர்ந்திருக்கும்…

படத்தை ஆஹா, ஓஹோவென சொல்ல முடியாவிட்டாலும் ஓகே என்று கூட சொல்ல முடியவில்லையே இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா அவர்களே!…