ஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை மையப்படுத்தி இந்த பசங்க-2வை உருவாக்கியிருக்கிறார் பாண்டிராஜ். அதற்குள் தற்போதைய கல்வி முறை, குழந்தைவளர்ப்பு முறை என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
இந்த ஏ.டி.ஹெச்.டியால் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தைகளை அவர்களது தொல்லை பொறுக்காமல் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்து விடுகின்றனர். முனீஷ்காந்த்-வித்யா மற்றும் கார்த்திக்-பிந்து மாதவி தம்பதியினர். பிரச்சனையில் இருந்து தளி நிற்பதாக வர்கள் செய்யும் செய்கை தவறு என அவர்களுக்கு புரியவைத்து, அந்த குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள் டாக்டர் சூர்யா மற்றும் டீச்சர் அமலாபால் தம்பதியினர்.
மொத்தத்தில் நவீனமயமாகிவிட்ட இன்றைய நகர வாழ்க்கையில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்ன, அவர்கள் செய்யத்தவறியது என்ன என அலுகாதவாறு பாடம் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். குழந்தைகளாக நடித்திருக்கும் பேபி வைஷ்ணவி, நயனா, நிஜேஷ், அபிமன் இவர்களின் துறுதுறு நடிப்பு அற்புதம். கேமரா முன் எந்தவித பயமுமில்லாமல், பல படங்கள் நடித்தவர்கள்போல் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் மருத்துவராக, குழந்தைகளின் ஆசிரியராக, அதே நேரத்தில் இரண்டு குழந்தைகளின் தகப்பனாக ஒரு நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளார். குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே கொண்டுசென்று அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவந்து, அவர்களது பெற்றோர்களின் அறிவுக்கண்களை திறக்கும் வேலையை செய்திருக்கும் சூர்யாவுக்கு இது புதிய களம்.. அவருக்கு உறுதுணையாக, மனைவியாக வெண்பா டீச்சராக வரும் அமலாபாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதிபுத்திசாலியான மகனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும்போதும், பெரிய அதிகாரியாக இருந்தும் கூட, பழக்க தோஷத்தால், சிறுசிறு பொருட்களை திருடும்போதும் காமெடியில் ரசிக்க வைக்கிறார் முனீஸ்காந்த். இந்தப்படம் அவருக்கு ஒரு ஸ்டெப் புரமோஷன் தான். இவருக்கு மனைவியாக வரும் வித்யா பிரதீப்,. அதேபோல், கார்த்திக் குமார் – பிந்து மாதவி தம்பதியும் அப்பர்மிடில் கிளாஸ் மக்களை நகலெடுத்த மாதிரி பிரதிபலித்திருக்கிறார்கள்.. இதில் பிந்துவின் நடிப்பில் அழுத்தம் அதிகம்..
நட்புக்காக வந்து நல்லதொரு செய்தியை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உணர்த்திச்செல்கிரார்கள் சூரி,, இயக்குனர்கள் சீனுராமசாமி, சமுத்திரக்கனி, மனோஜ் குமார், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர். ஒவ்வொரு பள்ளியையும் ஒவ்வொரு கோணத்தில் காட்டும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும், அரோல் குரோளியின் இசையில் பாடல்களும் குழந்தைகள் உலகத்திற்குள் நுழைய என்ட்ரி விசா தருகின்றன..
கமர்ஷியல் விஷயங்களை தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்தியுள்ள இயக்குனர் பாண்டிராஜின் வசனங்களில் கத்தியின் கூர்மை. குழந்தைகள் கேட்ட வார்த்தை பேசமாட்டார்கள்.. கேட்ட வார்த்தையைத்தான் பேசுவார்கள், 15 கிலோ எடை கொண்ட உருவத்தை 70 கிலோ கொண்ட உருவம் அடிப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பதெல்லாம் ஒருசில சாம்பிள்கள்.
நான் சின்ன வயதில் அங்கே ஏறி தாவுவேன், மதில் மேலிருந்து குதிப்பேன், சுவரெல்லாம் கிறுக்கிவைப்பேன், மதிப்பெண் குறைவாக வாங்கி, அப்பாவின் அடிக்கு பயந்து ஒளிந்துகொள்வேன், என இவற்றையெல்லாம் தங்களது பெருமையாக குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளும் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை மட்டும் அப்படி இருக்கவிடாமல் தடுப்பதும் ஒருவித வன்முறை தான் என்பதை இந்த பசங்க-2 மூலம் உணர்த்தியிருக்கிறார்.
பசங்க-2 – குழதைகளுக்கான படம்.. அதைவிட குழந்தைகளை எப்போதும் அடக்கிவைக்க துடிக்கும் பெற்றோர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.