பேய்கள் ஜாக்கிரதை – விமர்சனம்


பெரிய தொழிலதிபர் என்றாலும் தம்பிராமையாவுக்கு பேய் என்றால் பயம்.. இதனால் உயிர் பயம் இல்லாத ஒருவனை துணைக்கு வைத்துக்கொள்ளலாம் என சாமியார் ஒருவர் சொல்ல, பலமுறை தற்கொலைக்கு முயன்று உயிர்பிழைத்த இளைஞன் ஜீவரத்னத்தை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் தம்பிராமையா.

ஜீவரத்னம் வந்தபின் அவரது பேய் பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது.. இந்நிலையில் ஜீவரத்னத்தின் கண்களுக்கு மட்டும் நான்கு அமானுஷ்ய உருவங்கள் தெரிகின்றன. முதலில் பயப்படும் ஜீவரத்தினம், பின்னர் அந்த பேய்கள் எதற்காக வந்திருக்கின்றன என விசாரித்து அவற்றின் ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வைக்கிறார்.

ஆனால் ஒருகட்டத்தில் இந்த பேய்களுக்கு உதவப்போய், தனது காதலியின் கண்களுக்கு தப்பான ஆளாக தெரிந்து காதலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்த கோபத்தில் சத்தம்போட, பேய்கள் காணாமல் போகின்றன. ஆனால் அதன்பின் தான், அவற்றை பற்றிய உண்மை தெரிய வருகிறது.. அது தான் க்ளைமாக்ஸ்..

கதைச்சுருக்கத்தை படிக்கும்போதே என்ன, சூர்யாவின் மாசு கதையையும், ஸ்ரீகாந்தின் ஓம் சாந்தி ஓம்’ கதையையும் அப்படியே திரும்பவும் சொல்கிறார்களே என நினைக்கவேண்டாம்.. சத்தியமாக இதுதான் இந்தப்படத்தின் கதையும்.. இதில் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், பிளாக் பாண்டி ஆகியோரை வைத்து காமெடி தோரணம் கட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர் கண்மணி..

காமெடி நடிகர்கள் இருந்தாலும் ரசிகர்களை சிரிக்கவைக்கும் அளவுக்கு அவர்களுக்கு முறையான வாய்ப்பு தரப்படவில்லை.. பேய்ப்படம் என்றாலும் பெரிய அளவில் பயப்படுத்தவும் இல்லை. குறிப்பாக பேய்கள் எல்லாம் ரசிகர்களுக்கு நன்கு பழக்கமானபின் கதை வெகு மெதுவாக நகர்கிறது.

நமது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்துவிட்டாலும் கூட அவர்கள் நம் நன்மைக்காக நம்மைச்சுற்றி எப்போதும் அமானுஷ்யமாக இருப்பார்கள் என க்ளைமாக்ஸில் உணர்ச்சிப்பூர்வமாக ஒரு மெசேஜ் சொல்லவேண்டும் என்பதற்காக முழுப்படத்தையும், அதுவும் ஏற்கனவே இந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களின் சாயலிலேயே ஒரு இயக்குனர் தைரியமாக படமாக எடுக்கிறார் என்றால், அவரது குருட்டு தைரியத்தை பார்த்து பாவப்படத்தான் முடிகிறது.

ரசிகர்கள் ஜாக்கிரதை.