கும்பகோணத்தை சேர்ந்த விஜய்சேதுபதிக்கு காதலர்களை ஒன்று சேர்ப்பதும், மணப்பெண்ணுக்கு பிடிக்காத திருமண ஏற்பாடு என தெரிந்தால் தடுத்து நிறுத்தி பெண்ணை தூக்குவதும் தான் புல் டைம் டூட்டி.. அந்தவகையில் ரவுடி ஹரீஷ் உத்தமனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தூக்கி அவரது கோபத்திற்கு ஆளாகிறார்..
சரியாக விஜய்சேதுபதி தங்கையின் திருமணம் வரும்போது, விஜய்சேதுபதியை அழைத்து மதுரையில் உள்ள மந்திரி பொண்ணான லட்சுமி மேனனை தூக்கி வரும்படியும், இல்லாவிட்டால் அவரது திருமண வீடு இழவு வீடாக மாறும் எனவும் எச்சரிக்கிறார் ஹரீஷ் உத்தமன்..
தங்கையின் திருமணம் நிற்க கூடாது என்பதற்காக மதுரை சென்று ‘கில்லி’ வேலை காண்பித்து லட்சுமி மேனனை கடத்துகிறார்.. ஆச்சர்யமாக எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் லட்சுமியும் உடன் வருகிறார். பின்னர்தான் தெரிகிறது அந்தப்பெண் ஹரீஷ் உத்தமனின் தம்பியை கொன்ற வில்லன் கபீர்சிங்கிற்கு நிச்சயம் செய்யப்பட்டவர் என்பது..
இதன்மூலம் தம்பியை கொன்ற வில்லனை பழிவாங்குவது, தன்னை அவமானப்படுத்திய விஜய்சேதுபதியை வில்லனிடம் சிக்கவைப்பது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கறார் ஹரீஷ் உத்தமன்.. அவரது திட்டம் பலித்ததா..? விஜய்சேதுபதி காதலர்களை சேர்த்து வைப்பதற்கான காரணம் என்ன..? கடத்தப்போன லட்சுமி மேனன் தானாகவே கூட வந்த காரணம் என்ன..? இதற்கெல்லாம் விடையாக அமைந்திருக்கிறது ‘றெக்க’ படத்தின் க்ளைமாக்ஸ்.
விஜய்சேதுபதி முதன்முதலாக ஆக்சன் களத்தில் இறங்கியுள்ள படம் என்கிற அடைமொழியுடன் வெள்ளியாகியுள்ள இந்த ‘றெக்க’, அந்த அளவுக்கு அவருக்கு உதவி இருக்கிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.. காரணம் இதுநாள் வரை தேவைக்கு கூட சண்டைபோட யோசிக்கும் விஜய்சேதுபதியை இதில் தேவையில்லாமல் சண்டைபோட வைத்திருக்கிறார்கள்.. விஜய்சேதுபதி ஆக்சன் ஏரியாவில் கால் வைப்பது நல்ல விஷயம் தான்.. அவரும் செட்டாவார் தான்.. ஆனால் அதற்கான கதைதான், படு வீக்காக இருக்கிறது.
முன்பு ஜெனிலியா பார்த்துவந்த லூசுப்பெண் வேலையை இதில் லட்சுமி மேனனுக்கு மாற்றிவிட்டுள்ளார்கள். விஜய்சேதுபதியை காதலுடன் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே காலத்தை கடத்துகிறார் லட்சு.. ஹரீஷ் உத்தமன், கபீர்சிங் என இரண்டு வில்லன்கள்.. இதில் மூட்டைப்பூச்சியை உரலில் போட்டு நசுக்கி கொள்ளும் வடிவேலு திட்டம்போல விஜய்சேதுபதியை பழிவாங்க ஹரீஷ் உத்தமன் எடுக்கும் நடவடிக்கைகள் உஷ்..அப்பாடா ரகம். கபீர் சிங் வடக்கத்தி ஆள். வழக்கம்போல உதார் காட்டி கிளைமாக்ஸில் அடிவாங்குகிறார்..
கிஷோர்-ஸ்ரீஜா என ஒரு தனி காதல் ட்ராக்கும் இருக்கிறது.. கிஷோரை ரொம்ப சாதாரணமாக பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.. ஆனால் இந்த கேரக்டருக்கெல்லாமா கிஷோரை வீணடிப்பார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.. ‘ஸ்ரீஜா’ நம் மனதில் நிறைகிறார். விஜய்சேதுபதி-கே.எஸ்.ரவிகுமாரின் அப்பா மகன் பிரண்ட்ஷிப் கொஞ்சம் அதிகப்படி என்றாலும் ரசிக்க வைக்கிறது. சதீஷின் காமெடி தேவையான அளவுக்கு சேர்க்கப்பட்ட உப்பு..
இமானின் இசையில் ‘சும்மா கிர்ரு கிர்ரு’ மற்றும் ‘கண்ணை காட்டு போதும்’ பாடல்கள் ரிப்பீட் ரகம்..தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் குறை சொல்ல எதுவும் இல்லை.. ஆக்சன் ஏரியாவில் கதை பண்ணியிருக்கும் இயக்குனர் ரத்தினசிவாவுக்கு மட்டும் சில கேள்விகள்..
அவ்வளவு பெரிய ரவுடியான ஹரீஷ் உத்தமன், விஜய்சேதுபதியை சும்மா விட்டுவைப்பது ஏன்..? டாஸ்மாக் கடையில் இன்னொருவரின் பாட்டிலை தெரியாமல் தட்டிவிட்டதோடு, பாட்டிலை வைத்திருந்தவனிடம் காமெடி என்கிற பெயரில் சதீஷ் எகத்தாளம் பேசுவது என்ன லாஜிக்..? நிஜத்தில் என்ன நடக்கும் தெரியும் தானே.?
மதுரைக்கு போய் மினிஸ்டர் பொண்ணை தூக்கும் காட்சியில் ‘கில்லி’யை அப்படியே காப்பியடித்து காதில் பூச்சுற்றி இருப்பது ஏன்..? கொஞ்சம் புதிதாக யோசித்திருக்கலாமே.? மதுரையில், கோவையில் அவ்வளவு ரவுடி ஆட்களையும் அசால்ட்டாக அடிக்கும் விஜய்சேதுபதி, தனது தங்கையின் திருமணத்தை நிறுத்துவதாக ஹரீஷ் உத்தமன் தனது வீட்டுக்கு ஆட்களை அனுப்பியபோதே அவரது கழுத்தில் கத்தியை வைத்து கையை காலை முறித்திருந்தால்..? ஓ.. கதை நகர்ந்திருக்காது இல்லையா..?
அதிலும் அந்த மதுரை பைட்டும், கோவை பைட்டும் ஆக்சனை பிரதிபலிப்பதற்கு பதிலாக காமெடியின் உச்சமாகத்தான் இருக்கின்றன.. குறிப்பாக தண்ணீரில் கரண்ட் பாஸாவதை விஜய்சேதுபதி கணக்கிட்டு தப்பிப்பது எல்லாம் டூ.. டூமச். இப்படி இன்னும் பல கேள்விகளுடனேயே முழு திருப்தி தராமலேயே நமை அனுப்பி வைக்கிறார் இயக்குனர் ரத்தினசிவா..
Rating: 2.5/5