சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும், தனது போஸ்டரும் சத்யம் தியேட்டரில் ஒட்டப்பட வேண்டும் வேண்டும் என ஆசை.. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சான்ஸ் கேட்க, அவரோ ‘அவ்வை சண்முகி’ பார்ட்-2 எடுப்பதால் நர்ஸாக லேடி கெட்டப் போடமுடியுமா என கேட்கிறார். தவிர காதல் சைடில் வீக்கான சிவாவிடம் ரொமான்ஸ் பற்றி ஏற்றிவிட, அந்த இலக்கணங்களின்படி, டாக்டரான கீர்த்தி சுரேஷை பார்த்ததும் சிவாவுக்கு காதல் வருகிறது..
ஆனால் காதலை சொல்லப்போகும் நேரத்தில்தான் கீர்த்திக்கு இன்னொரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிகிறது. காதல் அரும்பிலேயே கிள்ளி எறியப்பட, சரி…, சினிமாவிலாவது சாதிக்கலாம் என நினைக்கும் சிவா, நர்ஸ் வேடத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.. இதில் மேக்கப் டெஸ்ட்டில் ஒகே ஆகி அப்படியே வீடு திரும்பும் சிவகார்த்திகேயனுடன் திடீர் ட்விஸ்ட்டாக பஸ்ஸில் பயணிக்கும் கீர்த்தி சுரேஷ் அவரை பெண் என நினைத்து பேசி நட்பாகிறார்..
இதனை தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதும் சிவகார்த்திகேயன், அந்த பெண் வேடம் மூலமாகவே கீர்த்தியை திசைமாற்றும் வேலையில் இறங்குகிறார். அவரது ஏமாற்று வித்தை கைகொடுத்ததா இல்லை அவரது குட்டு உடைந்ததா..? இதற்கெல்லாம் விடைசொல்கிறது க்ளைமாக்ஸ்..
வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காதலிக்கும் இளைஞன் அவளை எப்படி தன்னவளாக்குகிறான் என்கிற எவர்கிரீன் காதல் கதைக்கு புதிய திரைக்கதை வடிவம் கொடுத்து உருவாகியிருக்கும் படம் தான் ரெமோ.
மற்றெந்த நடிகர்களையும் விட சிவகார்த்திகேயனுக்கு பெண் வேடம், குறிப்பாக நர்ஸ் வேடம் ரொம்பவே கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் சிவகார்த்திகேயன் என்கிற ஹீரோ மறைந்து அவரது பெண் கதாபாத்திரமே நம்மை முழுக்க ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடுவது ஒன்றையே அவருக்கு கிடைத்த முழு வெற்றியாக சொல்லலாம். மற்றபடி அவரது ட்ரேட் மார்க் காமெடிக்கும் கொஞ்சமும் குறைவு இல்லை..
ரஜனி முருகனை தொடர்ந்து இதிலும் சிவகார்த்திகேயனுக்கு தான் சரியான ஜோடி என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.. அவருக்கும் சிவாவுகுமான செல்லச்சீண்டல்கள் இனிமை. திருமணம் நிச்சயமான பெண் வேறு ஒரு ஆடவனுடன் காதல் வயப்பட்ட பின் என்ன மாதிரியான உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுகிறார் என்பதை படு யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார்.
நான் கடவுள் ராஜேந்திரன், சதீஷ், யோகிபாபு என காமெடி கூட்டணியும் களைகட்டுகிறது.. குறிப்பாக ரெமோ நர்ஸை காதலிக்க துரத்தும் யோகிபாபு, வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்கவைக்கிறார். மகனுக்கு நல்ல பெண் கிடைக்கவேண்டும் என நினைக்கும் சரண்யா இதில் மட்டும் மாறிவிடுவாரா என்ன..? இயக்குனராகவே வரும் கே.எஸ்.ரவிகுமாரும் கலகலப்பூட்டுகிறார்.
கீர்த்தியுடன் நிச்சயமாகும் மாப்பிள்ளையாக வரும் மலையாள நடிகர் அன்சன், கீர்த்தியின் அப்பா ஆடுகளம் நரேன் என துணை கதாபாத்திரங்களின் பங்களிப்பும் சிறப்பு.. என்ன ஒன்று இதுபோன்ற படங்களில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிளையை பலிகடா ஆக்குவதற்காக கெட்டவனாக மாற்றுவார்கள்.. இதிலும் அதுதான் நடக்கிறது.
வழக்கமாக சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் துள்ளும் அனிருத்தின் இசை இந்தப்படத்திலும் ஜாலம் காட்டியிருக்கிறது. வெகுநாட்கள் கழித்து பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் ஒரு படம், பார்க்க கிடைப்பதே பாக்கியம்… அந்தவகையில் நாம் பாக்கியசாலிகள்.. அறிமுக இயக்குனரான பாக்யராஜ் கண்ணன் தான் எடுத்துக்கொண்ட கதையிலிருந்து அங்கிட்டு இங்கிட்டு என பார்வையை திருப்பாமல் சீரான வேகத்தில் திரைக்கதையை நகர்த்துகிறார்..
காதலுக்காக பெண் வேடம் போடாமல், பெண் வேடம் போட்டதை காதலுக்காக பயன்படுத்திக்கொள்வது என்கிற அவரது மாற்று சிந்தனையை வரவேற்கலாம். காதல், காமெடி, ஆக்சன் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கொடுத்த விதத்தில் நம்பிக்கை இயக்குனராக உருவெடுத்துள்ளார் என்று தாரளமாக சொல்லலாம்.
Rating: 3.8/5