பாகுபலி படத்திற்கு பின் ஆர்வத்தை தூண்டிய சரித்திரப்படம், அனுஷ்கா தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து ஒரு நாட்டின் ராணியாக நடித்துள்ள படம், தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த இயக்குனர் குணசேகரின் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் படம் என இப்படி சகலத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ருத்ரமாதேவி’ அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியிருக்கிறதா..?
காகத்தீய நாட்டு மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லை. இதனால் ஒருபக்கம் தேசத்தின் மீது படைதொடுக்க தருணம் பார்க்கிறது எதிரி நாடு.. இன்னொரு பக்கம் உள்நாட்டிலேயே ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறார்கள் பங்காளிகளான சுமன், ஆதித்யா இருவரும். இந்த சூழலில் ராஜ்யத்தை கட்டி காக்க ஒரு ஆண் வாரிசுவை எதிர்பார்க்கும் மன்னனுக்கு பெண் குழந்தையே பிறக்கிறது.
ஆனால் அமைச்சர் பிரகாஷ்ராஜோ நாட்டின் நலன் காக்க, பிறந்தது ஆண் வாரிசு தான் என மக்களையும் பங்ககாளிகளையும் எதிரிகளையும் நம்பவைத்து, பெண்குழந்தையை தனது கண்காணிப்பில் யாருமறியாமல் ஒரு ஆணாகவே வளர்க்கிறார். மன்னரும் இதற்கு சம்மதிக்கிறார்.
ருத்ரதேவன் என்கிற பெயரில் சகல வித்தைகளையும் கற்று வளர்ந்து பெரியவளாகும் அந்த பெண்(அனுஷ்கா) ஒரு கட்டத்தில் நாட்டின் இளவரசனாக பதவியேற்கிறாள்.. எதிரி நாடு கொடுக்கும் தொந்தரவையும், பங்காளிகள் அவ்வப்போது மேற்கொள்ளும் சூழ்ச்சிகளையும் முறியடிக்கிறாள். அவளுக்கு முடிசூட்ட விரும்பும் நேரத்தில் அவள் பெண் தான் என்கிற உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் அமைச்சர் பிரகாஷ்ராஜ்.
ஆனால் சிற்றரசர்களும், பங்காளிகளும், ஏன் மக்களும் கூட ஒரு பெண்ணான ருத்ரமாதேவி பதவியேற்பதை விரும்பவில்லை. ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் ருத்ரமாதேவி, தனது நண்பர்கள் சாளுக்கிய வீரபத்ரனான ராணா மற்றும் புரட்சி வீரன் கோனகண்ணா ரெட்டியான அல்லு அர்ஜூன் இருவரின் உதவியுடன் எதிரிகளின் சதியை முறியடித்து மக்களின் ஆதரவுடன் ராணியாக வெற்றி மகுடம் சூட்டுகிறாள்..
உண்மையான வரலாற்று சம்பவத்தை படமாக்க தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் குணசேகர்.. இதற்கு ராணி ருத்ரமாதேவியாக நடித்துள்ள அனுஷ்காவின் பங்கு ரொம்பவே அதிகம்… ஆணாகவே தன்னை உணர்வது, பெண் என தெரிந்தும்கூட நாட்டின் நலனுக்காகவே ஆண் தன்மையுடனேயே உலாவருவது எதிரிகளுடன் கத்திச்சண்டையிடுவது, யானையை அடக்குவது என ஒவ்வொரு காட்சியிலும் ஆணாகவே மாறி தனது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பதியவைத்துள்ளார் அனுஷ்கா.. நிச்சயம் அவருக்கு இது பெயர் சொல்லும் படம் தான்.
படத்தில் சிறிது சோர்வு தட்டும்போதெல்லாம் புரட்சி வீரன் கோனகண்ணா ரெட்டியாக நாட்டுக்குள் அதிரடி என்ட்ரி கொடுத்து அசத்தும் அல்லு அர்ஜுன் படத்தின் மிகப்பெரிய பக்கபலம். சாளுக்கிய வீரபத்ரனாக வரும் ராணா, அனுஷ்காவுடனான காட்சிகளில் மென்மையான நட்பிற்கு இலக்கணம் வகுத்து நடித்துள்ளார்.
நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, நேர்மையான மதியூக மந்திரியாக வரும் பிரகாஷ்ராஜின் பாத்திரப்படைப்பு நம்மை உண்மையிலேயே வசீகரிக்கிறது. ராஜ்யத்தை கைப்பற்ற பங்காளிகள் செய்யும் அத்தனை நரித்தனமான சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள் சுமனும் ஆதித்யாவும். பெண் என்று தெரிந்தே நாட்டின் நன்மை கருதி, அனுஷ்காவை திருமணம் செய்துகொள்ளும் நித்யா மேனனும், கோனகண்ணா ரெட்டி அல்லு அர்ஜுனை உசுப்பேற்றி காதலிக்கும் இளவரசியாக கேத்தரின் தெரசாவும் கூட நம் கவனம் ஈர்க்கிறார்கள்.
சரித்திரத்தை நம் கண் முன் மீண்டும் நிழலாட வைத்துள்ளார்கள் ஒளிப்பதிவாளர் அஜய் வின்சென்ட்டும், கலை இயக்குனர் தோட்டாதரணியும்.. அதில் இளையராஜாவின் பின்னணி இசையையும் உதவிக்கு சேர்த்து நம்மை கதை நடக்கும் காலத்திற்கே அழைத்து செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் குணசேகர்.
குணசேகர்-அனுஷ்கா கூட்டணியின் உழைப்பிற்கு நாம் ஒரு ராயல் சல்யூட் அடித்துதான் ஆகவேண்டும்..