சாகசம் என்ற வீரச்செயல் – விமர்சனம்


பிரசாந்த் படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என்கிற ஆவலில் தியேட்டருக்கு போனால் அங்கே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி நம்மை வரவேற்கிறது.

வேலைவெட்டிக்கு போகாத, பத்தாயிரம் கிடைத்தால் அதை வைத்து கிரிக்கெட் பேட்டிங்கில் ஒரு லட்சம் சம்பாதிக்க துடிக்கும் மிடில் கிளாஸ் இளைஞன் (!) பிரசாந்த், வங்கியில் இருந்து 1500 கோடி ரூபாயை கடத்தும் கடத்தல்காரன் சோனு சூட்டை போலீசில் சிக்க வைக்கிறார்.. இதனால் பிரசாந்தின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் இறந்துவிட்டதாக நாடகமாடி அவரை கோவைக்கு அன்ப்பி வைக்கிறது போலீஸ்.

கோவையில் நாயகி அமேண்டாவை காதலித்து டூயட் பாடிக்கொண்டு இருக்கும்போது, அங்கே வரும் சோனு சூட்டுக்கு பிரசாந்த் உயிருடன் இருப்பது தெரிகிறது. அவரையும் அவரது குடும்பத்தையும் அழைத்துவிட்டு வெளிநாட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்.. இதை போலீசாரை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவர்கள் உதவி இல்லாமல் சாகசம் செய்து பிரசாந்த் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை.

பிரசாந்திடம் இன்னும் துடிப்பு இருக்கிறது.. டான்ஸ் பட்டையை கிளப்புகிறார்.. ஆனால் கதை செட்டாகவில்லையே.. பிரசாந்தும் இந்தப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய தியாகராஜனும் கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்ப்படங்களே பார்ப்பதில்லையோ என்கிற சந்தேகம் படம் முடியும் வரை நம்மை தொடர்கிறது.

உள்ளூரில் ஆள் கிடைக்கவில்லை என்று, ஆஸ்திரேலியா போய் கதாநாயகி அமெண்டாவை அழைத்து வந்திருகிறார்கள். அப்பா. படுத்தி எடுக்கிறார். நாசர், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் எல்லோருமே வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமனின் இசையில் சாயாங்கோ உட்பட மூன்று பாடல்கள் நன்றாக இருக்கிறது.

வில்லன் சோனு சூட் புத்திசாலித்தனமாக திட்டங்கள் போடுவதையும், அவர் இப்படித்தான் திட்டங்கள் போடுவார் என இருந்த இடத்தில் இருந்தே மனக்கணக்கு போட்டு காய் நகர்த்தும் பிரசாந்த் அதி புத்திசாலியாக பதிலடி கொடுப்பதையும், பிரசாந்தின் பதிலடி இப்படித்தான் இருக்கும் என தானாகவே யோசித்து அவர் பதில் திட்டம் தீட்டுவதையும் இந்தப்படத்தின் தெலுங்கு ஒரிஜினலில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுன் பார்த்தாரென்றால் இதை மீண்டும் தெலுங்கில் ரீமேக் பண்ணும் வேலைகளில் உடனே இறங்கி விடுவார். இதில் இயக்குனர் அருண்ராஜ் வர்மாவை குறைசொல்லி என்ன பயன்.. அவர் வெறும் பகடைக்காய் தானே.

பிரசாந்த் மீண்டும் நடிப்பை தொடர விரும்புவதும், அவரது தந்தை தியாகராஜன் மற்ற மொழிகளில் வெற்றிபெற்ற கதைகளை வாங்குவதும் நல்ல விஷயம் தான்.. அதை குறைசொல்ல முடியாது.. ஆனால் இங்கே ரசிகர்களின் ரசனை வேறு லெவலுக்கு தாவிவிட்டதை தெரிந்துகொண்டு படங்களை கொடுத்தல் நலம்.