முதன்முதலாக விஜய்சேதுபதி போலீஸ் அவதாரம் எடுத்துள்ள ‘சேதுபதி’ படம் அவருக்கு கம்பீரத்தையும் இந்த டைட்டிலை மானசீகமாக விட்டுத்தந்த மகராசன் விஜயகாந்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வந்துள்ளதா..? பார்க்கலாம்.
மதுரை ஏரியாவில் உள்ள ஒரு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் விஜய்சேதுபதி, அதே பகுதியை சேர்ந்த இன்னொரு ஸ்டேஷன் எஸ்.ஐ, தீ வைத்து கொளுத்தப்பட்ட வழக்கை விசாரிக்கிறார்.. இதில் உள்ளூர் ‘வாத்தியார்’ ஆக இருக்கும் வேல.ராமமூர்த்தியின் பங்கு இருப்பதும் வேறு ஒரு எஸ்.ஐ.யை கொல்வதற்காக வைத்த குறியில் இந்த எஸ்.ஐ சிக்கி இறந்ததும் தெரிய வருகிறது.
இந்த உண்மையை மோப்பம் பிடிக்கும் விஜய்சேதுபதி, வேறு ஒரு விசாரணையின்போது மாணவன் ஒருவனை கைதவறி சுட்ட வழக்கில் சஸ்பென்ட் ஆகிறார்.. தன் மீது தவறு இல்லை என நிரூபிக்க முயற்சி எடுக்கும் நேரத்தில், அவரை மீண்டும் பணியில் சேரவிடாமல் தொந்தரவு கொடுக்கிறார் வேல.ராமமூர்த்தி. இதை விஜய்சேதுபதி முறியடிக்கிறாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விஜய் சேதுபதிக்கு யூனிபார்மும் கம்பீரமும் பொருந்திய அளவுக்கு கதை பொருந்தவில்லையே.. போலீஸ் கதை என்றாலே பத்து நிமிடத்திற்கு ஒருமுறை பரபரப்பை எதிர்பார்க்கும் ரசிகனுக்கு உரிய தீனியை விஜய்சேதுபதியால் வழங்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.. அதற்காக அதிரடி காட்சிகள் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. சக இன்ஸ்பெக்டர் ஒருவரை அடிப்பது, வேலா ராமமூர்த்தியை அடித்து இழுத்து வருவது என ஓரிரு இடங்கள் உண்டு.
ரம்யா நம்பீசன் அழகுதான்.. அதற்காக போலீஸ் படத்தில் கணவன்-மனைவி ஊடல்-கொஞ்சல் என திரும்ப திரும்ப காட்டிக்கொண்டிருந்தால் கடுப்புதான் வருகிறது யுவர் ஆனர். வேல.ராமமூர்த்தியின் நடிப்பில் மிடுக்கு இருந்தாலும் ஒரு முழுப்படத்தையும் தாங்கும் வில்லன் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தில் வலு இல்லை..
காமெடி நடிகர்கள் என யாரும் இல்லை. ஆனால் விஜய்சேதுபதியுடன் படம் முழுதும் கூடவே பயணிக்கும் லிங்கா சின்னச்சின்னதாக கவனம் ஈர்க்கிறார். விசாரணை கமிஷன் அதிகாரியாக வரும் நபர் பட்டையை கிளப்புகிறார். வேல.ராமூர்த்தியின் அல்லக்கைகள் ஆர்ப்பாட்டமாக வந்து டம்மி பீசாக மாறுகிறார்கள்.. விஜய்சேதுபதி வீட்டில் இல்லாதபோது ரவுடிகள் வந்து மிரட்ட, போனில் அவர் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்சன் படி அவரது மகனான பொடியன் துப்பாக்கியை எடுத்துவந்து சுடுவது எல்லாம் செம காமெடி.. மாத்தி யோசித்திருக்கலாம்..
போலீஸ் கதையை படமாக இயக்குவது என்பது தவம் மாதிரி.. ஆனால் வருடக்கணக்கில் இருந்திருக்க வேண்டிய தவத்தை மணிக்கணக்கில் ஷிப்ட் போட்டு இருந்தால் வரம் கிடைக்குமா என்ன..? அதுதான் இயக்குனர் அருண்குமாருக்கும் நேர்ந்திருக்கிறது. இப்படி எடுத்திருக்கலாமே என அவர்களை குறைசொல்வதை விட, இப்படி எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என நம்மால் ஆதங்கப்படத்தான் முடிகிறது.