சௌகார்பேட்டை – விமர்சனம்


ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி இருவருமே பேயாக நடித்திருக்கும் படம் என்பதாலும் தொடர்ந்து பேய்ப்படங்காக வெளியிட்டு வெற்றி வகை சூடிவரும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள படம் என்பதாலும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘சௌகார்பேட்டை’.

சௌகார்பேட்டையில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடி செய்யும் கோத்ரா சேட்டான சுமன், ஸ்ரீகாந்தின் தந்தை தலைவாசல் விஜய்க்கும் அதேபோல பணம் கொடுத்து ஒருகட்டத்தில் அவரது பங்களாவையே எழுதி கேட்கிறார்.. இந்தநிலையில் ஸ்ரீகாந்த்துக்கும். அவரது அத்தை மகள் ராய்லட்சுமிக்கும் திருமண ஏற்பாடு ஒரு பக்கம் நடக்கிறது.

தங்களது எண்ணம் நிறைவேறாது என தெரிந்து கொண்ட சுமனும் அவரது மகன்களும் ஸ்ரீகாந்த் ராய்லட்சுமி உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்று குவிக்கின்றனர்.. அதன்பின் அந்த பங்களாவை விற்க முயலும் சுமனை ஸ்ரீகாந்தும் ராய் லட்சுமியும் பேயாக வந்து பழிவாங்குவதுதான் மீதிக்கதை.

வழக்கமாக படம் இடைவெளியா வரை பேய்(கள்) நமை மிரட்டிவிட்டு, தான் பெயானதற்கு ஒரு பிளாஸ்பேக் காரணம் சொல்வதுதான் இதுவரை உள்ள நடைமுறை.. இதில் கதையை ஆரம்பித்துவிட்டு, அதன்பின் பேயாக மாறி பழிவாங்குவதை எவ்வித ட்விஸ்ட்களும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வடிவுடையான்.. அது புதிதாக இருந்தாலும் அதுவே திரைக்கதையின் பலவீனமும் ஆகிவிடுகிறது.

ஒருபக்கம் அகோரமான பேயாகவும், இன்னொரு பக்கம் வில்லத்தனம் காட்டும் அகோரமான மந்திரவாதியாகவும் இருவேறு கெட்-அப்களிலும் தன் அழகான முகத்தை அகோரமாக்கிக்கொண்டு பயமுறுத்துகிறார் ஸ்ரீகாந்த். இரண்டு கேரக்டர்களுக்காகவும் அவர் தன்னை வருத்திக்கொண்டு உழைத்த விதம் பாராட்டத்தக்கது.. இரண்டு கேரக்டர்களிலும் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டியுள்ளார் ஸ்ரீகாந்த். நிச்சயமாக இந்தப்படம் அவருடைய சேஞ்ச் ஓவர் என்றுதான் சொல்லவேண்டும். என்றாலும் படத்தின் மோசமான திரைக்கதையால் அவரது உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக ஆகிவிட்டது என்பது தான் வருத்தம் தருகிறது..

மாயாவாக வரும் ராய் லட்சுமியும் தனது பங்கிற்கு குரூரமாக பேய்முகம் காட்டி நம்மை சோதித்தாலும் அவ்வப்போது கிளாமரான தோற்றத்தில் வந்தும் ஆறுதலளிக்கிறார். படம் முழுவதும் நம்மை ஆச்சர்யப்படுத்துவது. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி இருவரின் மேக்கப் தைரியம் தான்.

காமெடி கலந்த வில்லத்தனத்தில் சௌகார்பேட்டை சேட்டாக சுமன். அவரது வெள்ளை விக்கும் சரி, அவரது டப்பிங் குரலும் சரி மொத்தம் பொருந்தவில்லை. அதிலும் அப்பனே மகன்களுக்கு கூட்டிக்கொடுக்கும் கண்றாவி இந்தக்காலத்திலுமா தொடர்கிறது..? கொடுமை சாமி..,

சுமனின் அல்லக்கைகளாக சரவணன், சிங்கம் புலி, பவர் ஸ்டார் ஆகியோர் காமெடி என்கிற பெயரில் படம் முழுதும் பேய்களை விட டார்ச்சர் பண்ணுகின்றனர். மாற்றுத்திறனாளி வடை சுடுவதாக காட்டும் காட்சி அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

சுமனின் வாரிசுகளில் ஒருவராக வரும் லிங்கேஷ் கவனிக்க வைக்கிறார். சுடுகாட்டு மந்திரவாதியாக அவ்வப்போது சீரான இடைவெளியில் வரும் வடிவுக்கரசி தன்னால் மட்டுமே இந்த கேரக்டரில் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக மிரட்டும் லுக்கில் வந்து மிரட்டி செல்கிறார். ஜான் பீட்டரின் அதிரடி இசையில் ‘பயம் பயம்’ பாடலும் இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் நம் மனதில் நிற்பது ஆச்சர்யம்.

பேய்க்கதை என்றாலும் நமக்கு பயமே வராதது மிகப்பெரிய மைனஸ்.. பேய் என்பதற்காக அகோரமாக முகங்களை காட்டுவதும் அருவருக்க வைக்கிறது. மொத்த படத்தில், அழகிய பாடல்களும் இரண்டு ஸ்ரீகாந்துக்குமான ப்ளாஷ்பேக்கும் மட்டுமே ஆறுதல். மொத்தத்தில் இந்த சௌகார்பேட்டை’ பேய் மிரட்டத்தெரியாத ஒரு வீரியமில்லாத பேய் என்பதுதான் உண்மை.