பொதுவாக நம் தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனர்களாக இருப்பவர்களுக்கு வெளி மாநிலங்களில் மிகப்பெரிய மரியாதை உண்டு.. அதிலும் கடந்த 26 வருடங்களாக தமிழ்சினிமாவில் தனது இயக்குனர் நாற்காலியில் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் கே.எஸ்.ரவிகுமாரை பற்றி சொல்லவே வேண்டாம்.
தற்போது தமிழிலும் கன்னடத்திலும் ஒரே நேரத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார் இன்று இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகிய இளம் முன்னணி நடிகர்களை வைத்து வெகு விமரிசையாக நடத்தியும் விட்டார்..
இந்த விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேசியபோது சுதீப்பின் அன்பையும் மரியாதையையும் பற்றி சிலாகித்து பேசினார். அதாவது ஒருநாள் ரவிகுமார் காய்ச்சலோடு படப்பிடிப்பை நடத்திக்கொண்டு இருந்தாராம். அவரது வழக்கமான செய்லபாடுகளில் வித்தியாசம் கண்ட சுதீப் அதுபற்றி பக்கத்தில் இருந்த உதவி இயக்குனர்களிடம் விசாரிக்க, அவர்கள் சாருக்கு காய்ச்சல் என்றார்களாம்.
என்ன சிரமம் என்றாலும் கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் படத்தை இயக்குபவராச்சே கே.எஸ்.ரவிகுமார்.. அதனால் அவரை லீவு போட சொன்னாலும் கேட்கமாட்டார் என்பதால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதுபோல நாடகமாடி, தயாரிப்பாளரிடம் சொல்லி இரண்டு மூன்று நாட்களுக்கு பேக்கப் சொல்ல வைத்துவிட்டாராம்..
ஆனால் சுதீப் வரவில்லையே தவிர மற்ற நடிகர்களை வைத்து எடுக்கும் காட்சிகளை மறுநாள் கே.எஸ்.ரவிக்குமார் அதே காய்ச்சலுடன் வந்து படமாக்கினார் என்பது தனிக்கதை.