தாரை தப்பட்டை – விமர்சனம்


கரகாட்ட கலைஞர்களின் அவல வாழ்க்கையை சொல்லும் படம் தான் தாரை தப்பட்டை..

கரகாட்ட, இசை வித்துவானான ஜி.எம்.குமாரின் மகன் சசிகுமார்.. தந்தையின் அர்த்தமற்ற உபதேசங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு தனது தலைமையில் கரகாட்ட ட்ரூப் ஒன்றை நடத்துகிறார். இந்த ட்ரூப்பில் இருக்கும் வரலட்சுமி, சசிகுமார் மேல் பைத்தியமாக இருக்கிறார். ஆனால் காலச்சூழல் காரணமாக வரலட்சுமியை விரும்புவதாக கூறும் சுரேஷுக்கு சசிகுமாரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து வைக்கிறார் வரலட்சுமியின் அம்மா.

அதன்பின் வரலட்சுமியை மறந்து, அவர் இல்லாத கரகாட்ட குழுவை மிகுந்த சிரமத்துக்கு இடையே நடத்துகிறார் சசிகுமார். சில மாதங்கள் கழிந்த நிலையில் தனது மகள் என்ன ஆனாள் என்றே தெரியவில்லை என பகீர் கிளப்புகிறார் வரலட்சுமியின் அம்மா. வரலட்சுமியை தேடிப்போகும் சசிகுமாருக்கு, அவரது கணவனின் மற்றொரு முகம் தெரிய வருகிறது.. தொடர்ந்து ஆபத்தும் சசிகுமாரை தேடி வருகிறது.. முடிவு என்ன என்பது மனம் கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

ரொம்பவே பழமை வாய்ந்த கதை தான்.. சசிகுமார் தனது கேரக்டருக்காக மெனக்கெட்டிருந்தாலும், அவரை விட அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார் வரலட்சுமி சரத்குமார். தெனாவெட்டான பேச்சு, கூச்சம் பாராமல் அரைகுறை ஆடைகளுடன் கரகாட்டம் ஆடுவது, திருமணத்துக்குப்பின் அத்தனையும் அடங்கி ஒடுங்கி விடுவது என நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

புதிய வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் வில்லத்தனத்தில் ஓரளவு எடுபடுகிறார். ஜி.எம்.குமாரின் விட்டேத்தியான நடிப்பு சபாஷ் சொல்ல வைக்கிறது.. கரகாட்ட ட்ரூப்பில் வரும் ஒவ்வொருவரும் தனி கவனம் பெறுகிறார்கள்..

இளையராஜாவின் இசை படத்துக்கு பொருத்தமாக இருந்தாலும் பாட்லக்ள் மனதை கவர தவறுகின்றன. செழியனின் ஒளிப்பதிவு அருமை.. பாலாவின் வழக்கமான ‘அடிமட்ட மனிதர்கள்’ பற்றிய கதைக்களம் தான் இதுவும்.. இதைவிட்டு அவர் வெளியே வரமாட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.. ஆனால் அழுத்தமில்லாத கதை, விறுவிறுப்பில்லாத திரைக்கதை, சுவாரஸ்யம் குறைவான காட்சிகள் என பாலாவின் முந்தைய இரண்டு படங்களை கூட ஓவர்டேக் செய்ய தடுமாறுகிறது இந்த தாரை தப்பட்டை.