ஜெயராம் மகன் படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்..!


2014ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் அறிமுக விழா நடந்தது பலருக்கு ஞாபகமிருக்க வாய்ப்பில்லை.. அந்த விழாவில் கலந்துகொண்ட கமல் தான் ஜெயராமின் மகன் காளிதாசனை அறிமுகப்படுத்தி வாழ்த்தினார்.

அதன்பிறகு எப்போது படப்பிடிப்பை தொடங்கினார்களோ தெரியவில்லை, ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகளும் முடிந்து நீண்ட நாட்கள், இல்லை மாதங்களாகி விட்டன. ஆனால் படம் ரிலீசாகும் வழியைத்தான் காணோம்.

இந்த நேரத்தில் தான் கடந்த வருடம் பிரபுவுடன் காளிதாஸ் இணைந்து நடிப்பதாக ‘மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தின் அறிவிப்பு வெளியானது.. தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி இசைவெளியீட்டு விழாவையும் நடத்திவிட்டார்கள்.. அந்தப்படமும் விரைவில் வெளியாகப்போகிறது..

ஆனால் ஒரு பக்க கதை பற்றிய மூச்சு பேச்சையே காணோம்.. விசாரித்ததில் படம் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை என்றும், அதனால் இரண்டாவது படமான ‘மீன்குழும்பும் மண்பானையும்’ படம் ரிலீஸான பின்னர் ‘ஒரு பக்க கதை’ படத்தி ரிலீஸ் பண்ணிக்கொள்ளலாம் என்றும் ஜெயராம் முடிவு செய்துவிட்டாராம்.

மம்முட்டி, சுரேஷ்கோபி போன்ற ஹீரோக்கள் தங்களது வாரிசுகளை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியபோது, தான் மட்டும் தமிழில்தான் தனது மகனை அறிமுகப்படுத்துவேன் என சபதம் போடாத குறையாக தமிழுக்கு அழைத்து வந்தவர் ஜெயராம். அதனால் மகனின் முதல் படம் வெற்றிப்படமாக இருக்கவேண்டும் என்றுதான், ‘ஒரு பக்க கதை’ யை கிடப்பில் போட்டுவிட்டாராம்.