திருநாள் – விமர்சனம்


தஞ்சாவூர் சிட்டியையே மிரட்டும் ரவுடி சரத் லோகித்ஸ்வா.. அவரது ஆஸ்தான அடியாள் ஜீவா. பெயர் பிளேடு… சரத்தின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு அவரது எதிரிகளை துவம்சம் செய்பவர்.. சரத்தின் சாக்குமண்டி பார்ட்னரான ஜோ மல்லூரியின் மகள் நயன்தாராவும் ஜீவாவும் லவ் பண்ணுகின்றனர்.

இது ஊருக்கே தெரிந்து அவமானமாக, அதனால் ஊரைவிட்டு திருச்சிக்கு குடும்பத்துடன் புறப்படும் ஜோ மல்லூரி நண்பனிடம் தான் கொடுத்துவைத்த பங்குத்தொகையை கேட்கிறார்.. ஊரையே அடித்து ஏமாற்றிய சரத், நண்பனையும் ஏமாற்றி விரட்டுகிறார். ஜோ மல்லூரிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வரும் ஜீவா, சரத்திற்கே எதிரியாக மாறுகிறார்.

ரவுடித்தனத்தை விட்டு திருந்தி வாழ நனைக்கும் ஜீவாவுக்கு நயன்தாராவை திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் ஜோ மல்லூரி.. ஆனால் ஜீவாவை போட்டுத்தள்ள கருவிக்கொண்டே இருக்கிறார் சரத் லோகித்ஸ்வா. இவர்கள் இருவரையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள தயாராக திட்டம் தீட்டுகிறார் போலீஸ் அதிகாரி கோபிநாத். முடிவு என்ன ஆனது..?

அடியாள் கெட்டப் ஜீவாவுக்கு நன்றாகவே பொருந்துகிறது. ஆனால் அவரது கேரக்டரைத்தான் வலுப்படுத்தாமல் தொண்ணூறுகளின் அடியாள் போல காட்டியுள்ளார்கள். நயன்தாராவிடம் காதலை சொல்கிறேன் என காரில் அவ்வளவு நீள இழுவை காட்சி ஜீவாவுக்கு செட்டே ஆகவில்லை..

நயன்தாரா அவருக்குரிய கேரக்டரில் நடித்தால் அதுதான் அவருக்கு அழகு. பார்க்கும் நமக்கும் அழகு.. தாவணி சுற்றிய கிராமத்துப்பெண்ணாக நயன்தாராவை பார்க்க சற்றே சிரமமாகத்தான் இருக்கிறது சாமி. சரத் லோகித்ஸ்வாவின் ‘பாண்டிநாட்டு’ வில்லத்தனம் இதிலும் சேம் டிட்டோ.. ஜோ மல்லூரி எதார்த்தமான பண்பட்ட நடிப்பு, மூன்று காட்சிகளில் வந்தாலும் ‘நீயா நானா’ கொபித்தின் நடிப்பு முத்தாய்ப்பு.

காமெடி கருணாஸ் இதில் அய்யோ பாவம் கேரக்டரில் நெகிழ வைக்கிறார். முனீஷ்காந்த் ராமதாஸின் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. ரமா, பருத்திவீரன் சுஜாதா, மீனாட்சி என பலரும் இருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் மெலடி ரகம் என்றாலும் பழைய காலத்தை ஞாபகப்படுத்த தவறவில்லை.

ஹீரோவைவிட வில்லனுக்கு பலமான பில்டப்பை எதற்கு கொடுத்தாரோ இயக்குனர் பி.எஸ்.ராம்நாத்..?. வாட்டர் டேங்கில் இருந்து ஜீவா தப்பிக்கும் காட்சி மட்டும் லாஜிக்காக ‘அட’ என சொல்லவைக்கிறது. எந்தவித திருப்பமும் இல்லாத, அதேசமயம் முடிந்துவிட்டது என நினைத்துகொண்டிருக்கும் நேரத்தில் குத்துப்பாட்டு, மீண்டும் அடிதடி காட்சிகள் என இழுக்காமல் கிரிப்பாகவாவது படத்தை முடித்திருக்கலாம்