ஏமாற்றி பிழைக்கும் ஹீரோவிற்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு சிலையை கடத்தி வந்தால் 25 லட்சம் தருகிறோம் என ஒரு கும்பல் விலை பேசுகிறது. இதற்காக தேவதர்ஷினி, காதல் சுகுமார் இன்னும் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேராக கிளம்புகிறார்கள். சென்றவர்கள் சிலையுடன் சென்னை வந்தார்களா? இல்லையா? என்பதை நம் தலை வலிக்க, காது வலிக்க, கண் வலிக்க கதை சொல்லி இருக்கிறார் ‘காதல்’ சுகுமார்.
மிஸ்டர் சுகுமார், ஏதோ வடிவேலு சாயலில் இருக்கிறீர்கள் என உங்களை தேடி வாய்ப்பு வந்தது…. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு நாலு படங்களில் நடித்தோமா போனோமா என்று இல்லாமல் எதற்கு உங்களுக்கு இந்த டைரக்சன் ஆசை என்றுதான் கேட்க தோன்றுகிறது.. படத்தில் நடித்தவர்களில் தேவதர்ஷினி, சுகுமார், இவர்களில் யார் அதிகமாக கத்துகிறார்கள் என போட்டியே வைக்கலாம். செந்தில் காமெடி பண்ணுவார் என்பது தெரியும்.. ஆனால் செந்திலை வச்சே காமெடி பண்ணிட்டீங்களேப்பா.
சரி.. ஏதோ ஒரு புண்ணியவான் (அந்த ஆளும் பாவம் பண்ணியவர் தான்) பணம் போட்டால், எப்பா சாமிகளா, ஓரளவுக்காவது, கொஞ்சூண்டு சிரிக்கும்படியாவது படத்தை எடுக்க கூடாதா..? ஆனால் ஒன்று.. ‘காதல்’ சுகுமார் இந்தப்படத்தின் மூலம் ஒரு சாதனை செய்துவிடுவார் என்று மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.. இந்த ‘திருட்டு விசிடி’ படத்துக்கு நிச்சயமாக திருட்டு விசிடி கூட வெளியாகாது என்பதுதான் அது.