இந்தப்படத்தை இரண்டு கோணங்களில் அணுகலாம்.. ஒன்று இந்தப்படத்தை ஏன் எடுத்தார்கள் என்பது.. இன்னொன்று இந்தப்படத்தை எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது என்பது.. கதையை வைத்து உங்களால் எதுவும் தீர்மானிக்க முடிகிறதா பாருங்கள்..
ஒரேநாளில் பக்கத்து பக்கத்து வீடுகளில் குடியிருக்கும் மூன்று பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ்.. பள்ளிக்காலம் வரை ஒன்றாகவே படிக்கிறார்கள்.. மனிஷா ஊருக்கு போன ஒரு சமயத்தில் தான், ஆனந்தியின் மீது தான் காதல் வயப்பட்டுள்ளதை உணர்கிறார் ஜி.வி.பிரகாஷ்.. ஆனந்தியும் லவ்வுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்..
ஒருநாள் இரவு இருவரும் ரொமாண்டிக் மூடில் நெருக்கமாக செய்த சில்மிஷங்களை, மறுநாள் தனது நண்பனிடம் பெருமைக்காக ஜி.வி சொல்லிவைக்க, அவன் அதை பள்ளி முழுவதும் தண்டோரா போடுகிறான்.. இதனால் கடுப்பான ஆனந்தி, ஜி.வியுடன் தன் காதலை பிரேக் அப் பண்ணிவிட்டு, சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் சென்றுவிடுகிறார்.
ஆனந்தி விட்டு செல்லும் அடுத்த கணமே மனிஷா தனது லவ்வை சொல்ல, ஆனந்தியின் மேல் இருந்த கோபத்தினால் மனிஷாவுடன் லவ்வாகிறார் ஜி.வி.. சில பல கட்டங்களுக்கு பிறகு இருவரும் உறவு வைக்க (நம்புங்கள்.. உண்மையாகத்தான் பாஸ்) துடிக்கிறார்கள். பின்னர் மனிஷாவிடம் இருக்கும் குடி பழக்கத்தை ஜி.வி கண்டிப்பதால் அந்த காதலும் பிரேக்கப் ஆக, விரக்தியில் தனது சித்தப்பா வி.டி.வி கணேஷை தேடி ஆறுதல் பெற கும்பகோணம் வருகிறார்.
வந்த இடத்தில் இளமை ததும்பும் ஆனந்தியை மூன்று வருடம் கழித்து பார்க்கிறார்.. மீண்டும் காதல் துளிர்விட….போதும்..போதும்… இப்போது ஓரளவு கதை என்னவென்று புரிந்திருக்கும் தானே..
விஷயம் என்னவென்றால் கதையாக பார்க்கும்போது கூட, ஒகே பருவ வயதில் வரக்கூடிய காதல், இனக்கவர்ச்சியை தானே சொல்கிறார்கள் என தோன்றலாம்.. ஆனால் அதை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காட்சிப்படுத்திய விதம் இருக்கிறதே, அதில் தான் அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், யார் இவர் என புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்.
இறங்கி அடிக்க வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் முடிவுசெய்துவிட்டதால் அது எந்த ரூட்டாக இருந்தால் என்ன களத்தில் இறங்கி தூள் கிளப்புகிறார்…இன்றைய தேதியில் நகரத்தில் வசிக்கும் நடுத்தர பையன்களின் பிம்பமாக, அவர்களது மன உணர்வுகளை கொட்டியுள்ளார்.கெட்ட வார்த்தைகளை அசால்ட்டாக பேசுறீங்களே பாஸ்..
அடடே… ஆனந்தியா இது..? பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்கிற தொலைநோக்கு பார்வையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, காட்சிக்கு காட்சி ஒவ்வொரு உரையாடலிலும் இன்றைய பள்ளிப்பருவ ரசிகனை வசியப்படுத்தும் வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இயக்குனர் கொடுத்த வசனங்களை அப்படியே பேசியிருப்பது துணிச்சலின் உச்சம்..
மனிஷா மட்டும் சளைத்தவரா என்ன..? அவர் பங்கிற்கு போட்டு தாக்குகிறார். சரக்கடிப்பது, காண்டம் யூஸ் பண்ணுவது பற்றி பேசுவது, குரூப் ஸ்டடி என்கிற பெயரில் தடம் மாற பார்ப்பது, Drink n Drive கொஞ்சம் வேகமா இருக்கும்.. எனக்கு வேகம்னா பிடிக்காது என நவநாகரீக பெண்ணை நம் கண்முன்னே நிறுத்துகிறார்.. அவ்வப்போது ஜி.வி.பிரகாசுக்கு ஆறுதல் சொல்லி நம்மையும் ஆசுவாசப்படுத்துகிறார் வி.டி.வி.கணேஷ். சிம்ரனும் யூகி சேதுவும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ப்ளேபாயாக கெஸ்ட் ரோலில் வந்து போகிறார் ஆர்யா.
முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க, கூடவே தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்து தர ஒரு இயக்குனர் போகக்கூடாத வழிகள் என்று சில இருக்கின்றன. பெயரும் லாபமும் உறுதி என்றாலும், அதில் கிடைக்கும் வெற்றியில் நேர்மையும் நிம்மதியும் இருக்காது.
முன்பு செல்வராகவன் இயக்குனராவதற்காக தனது முதல் படத்தை தேர்ந்தெடுத்ததும், பின்னர் வந்த இயக்குனர் சாமி முதல் படத்தில் இருந்தே தனது ரூட்டை மாற்றி போட்டதும் இந்த வழியில் தான்.. இப்போது பத்து வருடங்கள் கழித்து ஆதிக் ரவிச்சந்திரனின் முறை போலும்..
இன்றைய டீனேஜ் பசங்களில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.. ஆனால் இரட்டை அர்த்தமெல்லாம் இல்லாமல் நேரடியாக உபயோகிக்கும் கெட்ட வார்த்தைகள், உடலுறவு குறித்து மாணவனும் மாணவியும் அப்பட்டமாக பேசிக்கொள்வதை எல்லாம் படம்பிடித்து காட்டுவது புரட்சியில் சேராது மிஸ்டர் ஆதிக்.. பத்து வருடங்களுக்கு முன்பே இதைச்செய்து சூடுபட்டுக்கொண்டவர்கள் தான் இயக்குனர் ஷங்கரும், எழுத்தாளர் சுஜாதாவும்.
ஊர் உலகத்தில் இப்போது நடப்பதைத்தானே நான் காட்டியிருக்கிறேன் என அவர் சமாதனம் சொல்லலாம். ஆனால் படம் ‘ஏ’ சான்றிதழே பெற்றிருந்தாலும் ஜி.வி.பிரகாஷ் பிரபலமானவர் என்பதால் குடும்பத்துடன், தங்களது வயது வந்த பிள்ளைகளுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தித்தான் அனுப்பி வைக்கிறார் ஆதிக்.
ஆனாலும் இளைஞர்கள் தங்கள் “‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இல்லனா பிரியா ஆனந்த்”வுடன் ஒரு ஜாலி ட்ரிப் போய் வரலாம்.