கோவையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை ஒரு நாவலாக எழுத, அதை பின்னணியாக கொண்டு இந்த கதையை வடித்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் இப்படம் பலத்த வரவேற்புடன் வெளியாகியுள்ளது..
கதை என்ன…? சின்ன பிரச்சனை காரணமாக ஆந்திராவுக்கு ஓடிவரும் சிலருடன் அங்கிருக்கும் கடையில் வேலை பார்த்து வரும் தினேஷையும் சேர்த்து நான்கு பேரை விசாரணை என்கிற பெயரில் போலீஸ் அள்ளிக்கொண்டு போகிறது. செய்யாத திருட்டை தம் தலையில் கட்டப்போகிறார்கள் என்பது தெரிந்தும். இடைவிடாமல் போலீஸார் பின்னி பெடலெடுத்தும் கூட, செய்யாத திருட்டை ஒப்புக்கொள்ள முடியாது என்று சாதிக்கிறார்கள் அந்த அப்பாவிகள்.
எப்படியாவது அவர்களை ஒப்புக்கொள்ளவைக்க விதவிதமான டெக்னிக்குகளில் அடித்து துவைக்கிறது போலீஸ். ஒரு வழியாக வேறு வழக்கு விஷயமாக வரும் தமிழக போலீஸ் அதிகாரி சமுத்திரகனி மூலம் அவர்கள் விடுதலை ஆகிறார்கள். ஆனால் அது உண்மையான விடுதலை இல்லை என்பது பின்னர்தான் தெரிய வருகிறது. தினேஷும் மற்றவர்களும் என்ன ஆகிறார்கள் என்பதே மீதிப்படம்.
எவ்வளவு அடித்தாலும் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள மாட்டேன் என வைராக்கியமாக நிற்கும்போது ‘அட்டக்கத்தி’ தினேஷ் நம்மை பதைபதைக்க வைக்கிறார். தினேஷிற்கு நிச்சயம் இது புதுமையான அனுபவமாக இருக்கும். ‘ஆடுகளம்’ முருகதாஸுக்கு தினேஷுக்கு இணையான கேரக்டர்.. அவரும் நிறைவாக செய்துள்ளார்.
சிறிய வேடமே என்றாலும் தெலுங்கில் பேசி, தன் உணர்வுகளை புரிய வைக்கிறார் ஆனந்தி. போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பு படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது.. கிஷோரை கட்டித் தொங்கவிட்ட பின்பு வேகவேகமாக வந்து அவரை கீழே இறக்கிவிட்டு உதவி கமிஷனரிடம் போனில் ‘ஐயா.. ஐயா’ என்று சொன்னபடியே அவருக்கு பதில் சொல்கின்ற ஒரு காட்சி போதும் அவரது நடிப்பில் மெருகு கூடிவருவதை பறைசாற்ற..
ஒவ்வொரு அசைவிலும் பார்வையிலும் தன்னை நிரூபித்திருக்கிறார் வெற்றிமாறனின் ஆதர்ச நடிகரான கிஷோர். ஜி.வி.பிரகாஷின் இசை திரைக்கதைக்கு பக்கபலமாக செயல்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கமும் தன் பங்குக்கு லாக்கப் காட்சிகளில் மிரட்டுகிறார்.
ஒரு லாக்கப், அதற்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள். லாக்கப் கொடூரங்கள். அந்த முதல் பாதியை பார்க்கிற எவரும், போலீஸ் ஸ்டேஷன் அமைந்திருக்கும் தெருவழியாக கூட பயப்பட வைக்கும். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ என்கிற இரண்டு குறிப்பிடத்தக்க வெற்றி படங்களைக் கொடுத்துவிட்டு சில வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு படத்தைக் கொடுத்திருக்கும் வெற்றிமாறன் படம் பார்ப்பவர்களின் அடியவயிற்றில் பயம் கவ்வ வைத்து வெளியே அனுப்புகிறார்.. அதுதான் இந்தப்படத்தின் வெற்றியும் கூட.