சேரனும் வசந்தபாலனும் எடுத்த படங்கள் ஓடாததற்கு யார் காரணம்..?


சமீபத்தில் ‘பகிரி’ என்கிற படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் இயக்குனர் வசந்தபாலனும் ஒருவர். இந்த விழாவில் பேசும்போது, “பத்து கதாநாயகர்கள் படங்களைத் தவிர எதுவும் ஓடுவதில்லை. சேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது சினிமா. கமர்ஷியல் படமெடுத்து காசு பண்ண நினைக்காமல் நல்ல படம் எடுக்கும் கனவுடன் கிளம்பி வந்தோம். இன்று அந்தக் கனவு நொறுங்கி கொண்டிருக்கிறது” என தனது ஆதங்கத்தை கொட்டினார் இயக்குனர் வசந்த பாலன்..

சேரனின் ‘ஆட்டோகிராப்’பையும் வசந்தபாலனின் ‘அங்காடித்தெரு’வையும் கொண்டாடியவர்கள் தான் தமிழ் ரசிகர்கள்.. நல்ல படங்களை கொண்டாட எப்போதுமே தயங்காத அவர்கள், கலாரசனையில் காலமாற்றத்துக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள்.. ஆனால் சேரன், வசந்தபாலன் போன்றவர்கள் கதை உருவாக்கத்தில் இன்னும் பத்து வருடங்கள் பின்தங்கியே இருக்கிறார்கள்.

காசு பண்ண நினைக்காமல் நல்ல படம் எடுக்க வந்தோம் என்று சொல்லும் வசந்தபாலன், அரவான் மற்றும் காவியத்தலைவன் படங்களை எந்த ரசிகனை மனதில் கொண்டு எடுத்தார். இரண்டு படங்களுக்கும் அவ்வளவு செலவு செய்தும் அவரால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லையே.. தயாரிப்ளார் தலையில் துண்டை போட்டதுதானே மிச்சம்.

இயக்குனர் சேரனும் அதேபோல் தானே.. தங்களுக்கு பிடித்ததெல்லாம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்கிற மாயையில் படம் எடுக்கும் எந்த ஒரு இயக்குனரையும் சினிமாவும் கழட்டிவிட்டு விடும்.. ரசிகனும் கழட்டிவிட்டு விடுவான்.. இன்று கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சுந்தர்.சி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு போன்ற சீனியர்கள் இன்னும் பீக்கில் இருக்கும் சூட்சுமம் என்னவென்று இனிமேலாவது இவர்கள் புரிந்துகொண்டால் சரி..