எட்டில் இருந்து பத்து வயதிற்குள் உள்ள சிறுவர் சிறுமிகளை சில படங்களில் அறிமுகப்படுத்துகிறார்கள் இல்லையா..? அவர்களும் படங்களில் நன்றாக நடிக்கவே செய்கிறார்கள்.. விஷயம் அது இல்லை.. அதன்பின் ஒருசில வருடங்கள் கழித்து அவர்கள் ரெண்டும் கெட்டான் வயதில் இருக்கும்போது நடிப்பை நிறுத்திவிட்டு படிக்கப்போய்விட்டால் பரவாயில்லை..
ஆனால் நடப்பதென்ன..? ஒருசில இயக்குனர்கள் அவர்களை இளம் ஹீரோக்களாக வைத்து படம் எடுப்பதற்கென்றே வசதியாக பள்ளிக்கூட கதைகளை படமாக எடுக்கிறார்கள்.. இன்னும் சிலர் வெட்டியாய் சுற்றும் நான்கு சிறுவர்கள் என ‘கோலிசோடா’ பாணியில் கதையை தயார்செய்துகொண்டு இந்த சிறுவர்களை உள்ளே திணித்து விடுகிறார்கள்..
பொதுவாக காதல் கதையை படமாக்கும் இயக்குனர்கள் பள்ளி மாணவர்களுக்குள் காதல் அரும்புவதாக காட்டும் படங்களை தவிர்க்கலாமே என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.. ஆனால் இன்றைய மாணவர் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து. அதற்கான படிப்பினையாகத்தான் படங்களை உருவாக்குகிறோம் என சில இயக்குனர்கள் கிளம்பி வரும்போது நாம் என்ன சொல்வது..?
அந்தவகையில் மாணவர்களின் காதல் பட லிஸ்ட்டில் புதிய இடம்பிடிக்க தயாராகி வருகிறது அய்யனார் என்பவர் இயக்கியுள்ள ‘எதிர் கொள்’ படம். கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட சில படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மேக்னா நடிக்கிறார்
இந்தப்படமெல்லாம் ஓடுது ஓடவில்லை என்பதை விட, இதுபோன்ற படங்களை பார்க்கும் சில பிஞ்சுகளின் மனதில் நஞ்சு கலந்தாலும் கூட அது விபரீதம் தான்.. எல்லோருமே சமுத்திரக்கனி போல சமூக உணர்வுடன் கண்ணியமாக படம் எடுக்கிறார்களா என்ன..?
இன்றைய நவீன யுகத்தில் ஏற்கனவே பல விஷயங்கள் இப்படி ரெண்டும் கெட்டான் பருவத்தில் உள்ள மாணவ செல்வங்களை தவறாக திசைதிருப்பி வருகிறது.. இப்படி சில இயக்குனர்களும் பள்ளிக்கூடங்களையே சுற்றிவந்தால், இதை யார்தான் சொல்லி தடுப்பது..? இதற்கு என திரையுலகில் ஏதாவது புதிய சட்டமோ அல்லது திட்டமோ அமலுக்கு வருமா..? இல்லை சம்பந்தப்பட்டவர்கள் தானாகவே திருந்துவார்களா..? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..