இன்று வெளியான ஒரு செய்தியை பார்த்துவிட்டு திரையுலகத்தினரும் ரசிகர்கள் பலரும் ஆச்சர்யப்பட்டுத்தான் போயிருப்பார்கள்.. அதாவது ஜெயம்கொண்டான் பட இயக்குனர் ஆர்.கண்ணன் அடுத்ததாக தான் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்பத்தான் அந்த செய்தி.
இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்கிறீர்களா..? ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை முடித்ததும் ஆர்.கண்ணன் அடுத்ததாக ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ என்கிற படத்தை இயக்குவதாக முடிவு செய்திருந்தார். இதில் ஹீரோவாக விஷ்ணு நடிக்க இருக்கிறார் என்கிற செய்தியும் கூட வெளியானது..
ஆனால் தற்போது என்ன காரணத்தினாலோ அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு, இப்போது கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை இயக்க பூஜையும் போட்டுவிட்டார் கண்ணன். இன்றைய தேதியில் விஷ்ணு நடிக்கும் படங்கள் முதலுக்கு மோசமிலாமல் ஓடி தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபத்தையும் தருகின்றன. டைரக்டரையும் காப்பாற்றுகின்றன.. சமீபத்தில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றியே இதற்கு உதாரணம்.
ஆனால் கௌதம் கார்த்திக் இதுவரை நடித்த மூன்று படங்களுமே தோல்விப்படங்கள் தான்.. அதுமட்டுமல்ல அவரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட ‘சிப்பாய்’ படம் அப்படியே கைவிடப்பட்டது. தற்போது நடித்தவரும் ‘முத்துராமலிங்கம்’ படம் கூட நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்துவருகிறது. அதுமட்டுமல்ல தனது தந்தை பாணியில் கௌதம் கார்த்திக்கும் தனது படங்களின் படப்பிடிப்புகளில் சரியான நேரத்தில் கலந்துகொள்வதில்லை என ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்த நேரத்தில் தன்னை கரைசேர்க்கும் கட்டுமரமான விஷ்ணுவை விட்டுவிட்டு, மேலே ஏறவிடாத வழுக்கு மரமான கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்கும் ஆர்.கண்ணனை என்னவென்று சொல்வது..?