நாற்பது வயதை தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்க்கை வண்டியை ஓட்டுகிறார் தீபன்.. கணவனை இழந்த, இளம் வயது மகளை உடைய சோனியா கிரி என்பவர் தீபனின் அலுவலகத்திற்கு மாற்றலாகி வருகிறார். தீபனின் அப்பாவித்தனமான, நல்ல மனத்தால் ஈர்க்கப்பட்டு அவரை விரும்ப தொடங்குகிறார். தீபனும் அப்படியே..
இதேபோல பள்ளிப்பருவத்தில் மாணவன் நிஷ்னேஷுக்கும் சக மாணவி ஸ்வேதா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ரவுடியான கிறித்துவர் கார்த்திக் ரத்தினத்தை விரட்டி விரட்டி காதலிக்கிறார் அக்ரஹாரத்து பெண்ணான ஆர்யா பாலக். டாஸ்மாக்கில் வெளி பார்க்கும் வெற்றிக்கோ, முகத்தை மறைத்துக்கொண்டு பாலியல் தொழில் செய்யும் இஸ்லாமிய பெண்ணான மும்தாஸ் சர்க்கார் மீது கண்மூடித்தனமான காதல் . எல்லா காதலும் சுமூகமாக இருப்பது போல தோன்றினாலும் பிரச்சனைகள் வெவ்வேறு ரூபங்களில் பூதாகரமாக தோன்றுகின்றன.
இப்படி வெவ்வேறு பருவத்திலான நான்கு காதல்கள்.. நான்கிற்கும் நான்குவிதமான பிரச்சனைகள்.. அப்படி என்ன பிரச்சனைகள், இதில் எந்த காதல் கைகூடியது என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
நான்கு காதல்களில் சீனியர்களின் காதல் நம்மை ரொம்பவே ஈர்க்கிறது. வெகுளித்தனத்தின் மறு உருவமாகவே தனது நடிப்பை வழங்கியிருக்கும் தீபனை பாராட்டலாம். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சோனியா கிரி, காதல் உணர்வுகளை அழகாக வெளிபடுத்தி இருக்கிறார்.
ஆர்யா பாலக் தான் காதலிப்பவன் ரெடி என தெரிந்தே காதலிப்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் ரவுடியின் தலைனை சித்தப்பா முறை கொண்டாடி அழைக்கும் விதம் ரொம்பவே க்யூட்.
டாஸ்மாக் பணியாளர் போலவே மாறியுள்ளார் வெற்றி. அவரை காதலிக்கும் மும்தாஸ் சர்க்காரும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
பள்ளிப்பருவத்தில் இனம்புரியாமல் ஏற்படும் கவர்ச்சியை காதல் என்கிற கண்ணோட்டத்தில் காத்திருப்பதை நம்மால் ஏற்க முடியவில்லை. அதேசமயம் பள்ளி சிறுவனின் தந்தையாக, சிலைகள் செய்யும் கலைஞனாக நடித்திருப்பவர் யதார்த்தமான நடிப்பால் நம் மனதில் நிறைகிறார். திக்குவாய் பிரச்சனை காரணமாக ஒருவருடன் வாய்ச்சண்டை போடும்போது, அந்த வார்த்தைகளை பேப்பரில் எழுதிக்காட்டி சண்டை போடுவது ரசிக்க வைக்கிறது. அவரது முடிவு நம்மை அதிரவைக்கிறது.
இந்த நான்கு காதல்களுக்கும் ஒரு இணைப்பை கொடுத்து க்ளைமாக்ஸில் சஸ்பென்சை உடைத்துள்ளார் இயக்குனர் ஹெமம்பர் ஜஸ்டி. இந்தப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இதில் உள்ள ஏதோ ஒரு காதலர்களுடன் தங்களை நிச்சயமாக பொருத்தி பார்த்துக்கொள்ள முடியும்.