டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடுமையாகப் பரவி வருவதையும், அதனால் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகளையும் தமிழக சுகாதாரத்துறை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலும் இந்தக் காய்ச்சல் தமிழகம் முழுக்கப் பரவிவிடாதபடி தடுக்க வேண்டும்.
ராஜபாளையம் பகுதியில் கடந்த 20 நாட்களில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சல் குறித்த பயமும் பீதியும் மக்களிடத்தில் கடுமையாகப் பரவிவரும் நிலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்கி வருகின்றன. பரவுவது டெங்கு காய்ச்சலா, இல்லை வேறுவிதமான காய்ச்சலா என்பதை அறிய முடியாமலும், அதிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வழிமுறைகள் தெரியாமலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.
ஒரே நாளில் மூன்று குழந்தைகள் இறந்தபோதே இந்தப் பிரச்சனையில் தீவிர கவனம் காட்டியிருக்க வேண்டிய தமிழக அரசு மேற்கொண்டும் அசமந்தம் காட்டக்கூடாது. சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து பெற்றோர்களின் அச்சத்தைத் தீர்க்கும் விதமான விளக்கங்களையும் பாதுகாப்பு தகவல்களையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் கடந்த வருடக் கணக்கெடுப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதை மாநில சுகாதாரத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சலால் நிகழும் பாதிப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்த எல்லாவித நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும். அதேபோல், வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.