“கேரளாவில் திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சிக்கும் சுதந்திரம் உண்டு” ; பார்த்திபன் சீற்றம்..!


தமிழ்நாட்டில் தற்போது கருத்துச்சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வைரமுத்து-ஆண்டாள் சர்ச்சை விவாகரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் “கேரளாவில் திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சிக்கும் சுதந்திரம் உண்டு” என பார்த்திபன் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தற்போது ‘கேணி’ என்கிற படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில்,

“தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த “கேணி” படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

எனக்கு பெரியார் விருது கொடுத்த போது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது” என்று பேசினார்.