ஓட்டுநர்களால் ஓட்டுநர்களுக்காக ஓட்டுநர்களே முன்னெடுக்கும் ‘குய்க் கால் & ஆப் டாக்சி (Qik Call & App Taxi ) யின் செயலி அறிமுக விழா சோழிங்கநல்லூர் அலாப்ட் ஓட்டலில் நடைபெற்றது. அதற்கான செயலியை இத்திட்டத்தின் நிறுவனரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான சுவ்ரோ கோஷ் மற்றும் இணை நிறுவனரும் முதன்மை இயக்க அதிகாரியுமான டாக்டர் ஜோசப் கமலேஷ் ஆகியோர் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.
இதுகுறித்து டாக்டர் ஜோசப் கமலேஷ் பேசும் போது,
“இந்த குய்க் கால் & அண்ட் ஆப் டாக்ஸி, ஊக்கமுள்ள டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். அவர்களின் உழைப்புக்கேற்ற வருமானத்தை எந்தப் பிடிமானமும் இல்லாமல் பெற்றுத் தரும்.
இந்தச் செயலியை நாங்கள் அவர்களுக்கு வழங்கும் போது மாதாமாதம் அவர்கள் எங்களுக்கான சந்தாத் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இதை நாடு முழுக்க பயன்படுத்திக் கொள்ள முடியும். எங்கள் தொடர்பு எல்லை தாண்டியும் இது அவர்களுக்குப் பயன் தரும். இதற்கான தொகை மாதம் 2500 முதல் 3000 வரை மட்டுமே இருக்கும். இதைத் தவிர வேறெந்த கழிவுகளும் சேவைக் கட்டணமும் அவர்களுக்கு வராது.இப்போதெல்லாம் ஓட்டுநர்கள் 50,000 க்கு டாக்ஸி ஓட்டிவிட்டு கமிஷன் போக 30,000 தான் வீட்டுக்குக் கொண்டு போகிறார்கள். எங்கள் செயலியைப் பயன்படுத்துகிறவர்கள் 50,000 -த்தையும் முழுதாகக் கொண்டு செல்ல முடியும்.
இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப அவர்களும் எளிதாக ஓட்டும் படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு காரை வடிவமைத்து தருகிறோம். அவர்களும் பாதுகாப்புடன் நம்பிக்கையுடன் சம்பாதிக்க வகை செய்கிறோம். திருநங்கைகளுக்கும் இந்த உதவிகளை விரிவாக்க இருக்கிறோம். இதில் இணைந்தவர்களுக்கு குழு, குழுவாக செயலி இயக்கம் பற்றிய செய்முறைப் பயிற்சி அளித்து அவர்களின் கார்களைத் தரச் சோதனை செய்து எங்களுடன் இணைத்துக் கொள்வோம்.
இதுவரை 2000 பேர் எங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். இது 10,000 ஆனதும் பெரிய அளவில் அறிமுக விழா நடத்த இருக்கிறோம். இதனை நம் நாட்டிலேயே முதன் முதலாக நாங்கள் தான் அறிமுகம் செய்கிறோம். இதில் பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன. புதிதாகக் கார் வாங்க வங்கிக் கடனுக்கும் வழிகாட்டி உதவத் தயாராக இருக்கிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.