புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றி மறுபிறவி அளிக்கும் உன்னதமான பணியை செய்து வருகிறது வி.எஸ்.மருத்துவமனை. தற்போது அதன் இன்னொரு அம்சமாக, புற்று நோயாளிகளுக்கு உதவும் விதமாக வி.எஸ்.மெடிக்கல் ட்ரஸ்ட் மூலமாக 200 புற்று நோயாளிகளை கொண்ட ‘வசந்தம்’ என்கிற குழுவை உருவாக்கியுள்ளது இந்த நிர்வாகம்.
இதன் மூலம் புற்றுநோய் குறித்த தேவையில்லாத அச்சத்தை போக்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி கிடைக்கும் விதமாகவும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு பாலமாக இந்த அமைப்பு செயல்பட இருக்கிறது.
இன்று (ஜூலை-22) புற்று நோயை வென்றவர்கள் தினம்.. மற்ற யாவரையும் விட சென்னை வி.எஸ்.மருத்துவமனை நிர்வாக இந்த தினத்தை வித்தியாசமாக, விமரிசையாக, அதேசமயம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டாட நினைத்தது.. அதன் ஒரு பகுதியாகத்தான் புற்றுநோயை வென்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வைக்க ஒரு மேடை அமைத்து கொடுத்தது.
இந்த நிகழ்வில் பேராசிரியரும் முதன்மை மருத்துவருமான சுப்பிரமணியன் மற்றும் ‘பட்டிமன்றம் புகழ்’ ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு புற்றுநோய் குறித்த அச்சத்தை போக்கும் விதமான கருத்துக்களை கூறினார்கள்.
பேராசிரியரும் முதன்மை மருத்துவருமான சுப்பிரமணியன் இந்த நிகழ்வில் பேசும்போது, “இந்த தினத்தை வெறுமனே கொண்டாடுவது மட்டும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமல்ல.. புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் ஒரு முக்கிய காரணமாகும். முக்கியமாக புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதி தானே தவிர, அது சாபக்கேடு அல்ல.. இந்த நோயிலிருந்து எளிதில் காப்பற்ற முடியும் என்பதை அழுத்தமாக சொல்லிக்கொள்வதுதான் இதன் முக்கிய நோக்கம்” என கூறினார்..
மேலும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களை கூறி அவற்றை ஆரம்பத்திலேயே தவிர்க்க முயற்சிப்பதும், வருடந்தோறும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராசிரியர் சுப்பிரமணியன்.
மேலும் தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ துறையில் அடியெடுத்து வைத்தபோது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேரை மட்டுமே காப்பாற்ற கூடிய சூழல் இருந்தது என்றும், தற்போது 65 சதவிகிதம் பேரை காப்பாற்றும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்திருக்கிறது என்றும் கூறியவர், இந்த நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவத்தை நாடினால் 95 சதவீதம் பேரை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனது இனிமையான நகைச்சுவை பேச்சினால் அங்கே வருகை தந்திருந்த புற்று நோயாளிகள் தங்களது நோயை மறந்து சிரிக்கும் வண்ணம் உரையாற்றி அவர்களை மகிழ்வித்தார்.