மது அருந்திவிட்டு வராதீர், மற்ற கட்சியினர்களுக்கு முன்னுதாரணமாக ஒழுக்கத்துடன் இருங்கள் – சீமான் கட்டளை
“நாம் தமிழர்” கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள ஹெச் பி எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது பேசிய சீமான், 2016’ல் வரவிருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் “நாம் தமிழர் கட்சி” தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்தார். அது மட்டுமின்றி தாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டு வைக்கப்போவதில்லை என்றும், தம் கட்சி மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய சீமான், மே 18, 2015 அன்று திருச்சியில் “நாம் தமிழர்” கட்சியின் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். அந்த மாநாட்டிற்கு கட்சியினர் அனைவரும் தவறாமல் வந்து கலந்துகொள்ளும்படி அன்பு கட்டளையிட்டார். மாநாட்டிற்கு அனைவரும் தங்கள் குடும்பத்தினர், சகோதரர்கள், சகோதரிகளோடு கலந்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார்.
மாநாட்டிற்கு வரும் இளைஞர்கள் தாங்கள் விரும்பினால் தங்களுடைய காதலியையும் அழைத்துவரலாம் என நகைச்சுவையாக சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் உன் காதலிக்கும் நீ எப்படிப்பட்ட கட்சியில் இருக்கிறாய்? எதற்காக போராடுகிறாய் என்பதும் அவர்களுக்கும் தெரிய வரும்.
நகைச்சுவைக்கு பிறகு மீண்டும் தன சீரிய பேச்சை தொடர்ந்தார் சீமான். மாநாட்டிற்கு வருபவர்கள் கண்டிப்பாக மது அருந்திவிட்டு வரக்கூடாது, சாலையின் குறுக்கே நின்றுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் போக்குவரத்து காவலர்களின் பணியை தம் கட்சியினர் எவரும் செய்யக்கூடாது. சாலையை, தன் கட்சியினரின் வாகனங்களால் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, பேருந்துகளை தட்டி சத்தம் எழுப்புவது போன்ற மக்களுக்கு அருவெறுப்பு, சங்கடம் ஏற்படும் எத்தகைய செயல்களிலும் ஈடுபடக்கூடாது. பத்து பேர் ஒன்றாக சேர்ந்துவிட்டால் ரவுடித்தனம் செய்யும் போக்கு நம் கட்சி பிள்ளைகள் செய்யக்கூடாது. நாம் நமது சொந்தங்களின் பிணங்களின் மேல் உருவாக்கிய கட்சி இது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களது வலி நம்மை விட்டு விலகிவிடக்கூடாது. நமது நோக்கம் சரியான திசையை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்.
வரவிருக்கும் “நாம் தமிழர்” கட்சியினர் மாநாட்டில் தொண்டர்கள், மற்ற கட்சியினருக்கு எடுத்துக்காட்டாக மிகவும் கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் செயல்படவேண்டும் என அறிவுறுத்தினார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவரது ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் சம்மதம் தெரிவித்தபடி கைதட்டினர் கட்சியினர்.