ஒரு படம் முழுவதும் கூட சிவகார்த்திகேயனே காமெடியாக நடித்து சமாளித்து விட கூடியவர்தான். என்றாலும் அவரது படங்களில் இணைந்து நடித்து காமெடியில் களைகட்ட வைத்தவர்களில் யோகிபாபுவும் சூரியும் மிக முக்கியமானவர்கள். அதிலும் சிவகார்த்திகேயனின் கிராமத்து மணம் வீசும் படங்களில் சூரியும் தவறாமல் இடம் பெறுவார்.. காமெடிக்கும் மினிமம் கியாரண்டி உண்டு.. கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை என பல படங்களில் இவர்களது காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் என்கிற படத்திலும் அவருடன் காமெடி கூட்டணி அமைக்கிறார் சூரி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த சிவகார்த்திகேயன், “பட்டி.. எத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக். முதல்ல அத கவனிங்க” என கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சூரி கேடி பில்லா படத்தில் தான் வசனம் பேசும் ஒரு வீடியோ காட்சியை பதிவிட்டு, “பட்டி.. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிருக்கேன்ல” என கூறியுள்ளார். அப்படி அந்த வீடியோவில் சூரி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..? “அப்பா கோபத்துல பேசுறப்ப கரெக்சன்லாம் பண்ண முடியாது” என்கிற வசனம் தான் அது. அந்தவகையில் இப்போதே படத்திற்கு வெளியே கூட காமெடி களைகட்ட துவங்கியுள்ளது.