2K லவ் ஸ்டோரி ; விமர்சனம்


ஆண் பெண் நட்பை பேசி வெற்றி பெற்ற படங்கள் வரிசையில், ‘2K லவ் ஸ்டோரி’ படத்தை தந்துள்ளார் சுசீந்தரன். நாயகன் ஜெகவீரும், நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும் அக்கறையும் வெறும் நட்பு மட்டுமல்ல காலப்போக்கில் காதலாக மாறும் என்று அவர்களது நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, ஜெகவீர் மற்றும் மீனாட்சியின் நட்பு பல சோதனைகளை சந்திக்கிறது.

இந்நிலையில், ஜெகவீர் படித்த கல்லூரியின் ஜூனியர் லத்திகா பலமுருகன் ஜெகவீரை காதலிக்கிறார். இருவரும் சந்தோஷமாக இருந்துவரும் நிலையில் ஜெகவீருடன் பைக்கில் செல்லும்போது, விபத்தில் சிக்கி மரணமடைகிறார் லத்திகா.

மாதங்கள் பல சென்ற நிலையில், ஜெகவீர் – மீனாட்சி இருவருக்கும் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். இந்த திருமணத்திற்கு இருவரும் சம்மதித்தார்களா? இல்லையா? என்பது தான், ‘மீதிக்கதை.

அறிமுக நடிகர் ஜெகவீர் குழந்தைத்தனமான முகத்துடனும், குறையற்ற நடிப்புடனும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். கதையின் நாயகனாக இருந்தாலும், தனக்கு என்ன நடக்கும், எப்படிச் செய்வார் என்பதை துல்லியமாக கணித்து அபார சக்தியுடன் நடித்திருக்கிறார்.

நாயகி மீனாட்சி தனது கேரக்டருக்கு உயிர் சேர்த்திருக்கிறார். கண்களால் பல இடங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். கொஞ்சி பேசும் காதலியாக வரும் பவித்ரா சில காட்சிகள் என்றாலும் கவனிக்க வைத்து ரசிக்க வைக்கிறார். மற்றும் லத்திகா பாலமுருகன்,

பாலசரவணன் தன்னுடைய இயல்பான நகைச்சுவை தன்மையால் சில இடங்களில் பார்வையாளர்களை மகிழ்விக்கிறார். பிற்பகுதியில் வரும் சிங்கம்புலி மற்றும் குழுவினரின் கும்மாளம் ரசிக்க வைக்கிறது. ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி.பி முத்து, வினோதினி ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசையும் அதிகமான சத்தமின்றி அளவாக பயணித்து கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வி.எஸ்.அனந்த கிருஷ்ணாவின் கேமரா, பிரமண்டமான ஆல்பம் பார்ப்பது போன்ற உணர்வை படம் முழுவதும் கொடுத்திருக்கிறது. பாடல்கள் மற்றும் வசனக் காட்சிகள் என அனைத்திலும் நட்சத்திரங்களை அழகாக காட்டியிருப்பதோடு, படம் முழுவதையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

விக்ரமன் இயக்கத்தில் புது வசந்தம், மாதவன், ஜோதிகா நடிப்பில் பிரியமான தோழி, பிரசாந்த், ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட ஏற்கனவே பார்த்த பல படங்களின் கலவையாக வந்திருந்தாலும் 2கே கிட்ஸ் மட்டுமல்ல, எல்லா வயதினரும் ரசித்துப் பார்க்கக்கூடிய படமாக இதை இயக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.