ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் 7ஜி என்கிற கதவு எண் கொண்ட வீட்டில் ஸ்முருதி வெங்கட், ரோஷன்பஷீர் தம்பதியினர் குடியேறுகிறார்கள். ரோஷன் பஷீரின் அலுவலக தோழி சினேகா குப்தா அவரை அடைவதற்காக மாயமந்திர முயற்சிகளில் ஈடுபடுவதோடு, அவரது வீட்டில் சூனியம் செய்யப்பட்ட பொம்மையை வைக்கிறார். இதற்கிடையே, ரோஷன் பஷீர் வேலை விசயமாக வெளியூர் செல்ல, தனியாக இருக்கும் ஸ்முருதி வெங்கட் பல்வேறு அமானுஷ்ய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.
அந்த வீட்டில் அடைப்பட்டு இருக்கும் ஆத்மா ஒன்று திடீரென்று வெளியாகி, ஸ்முருதி வெங்கட்டை மிரட்டுவதோடு, “இது என் வீடு, இங்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறி அவரை விரட்ட முயற்சிக்கிறது. அந்த ஆத்மா யார்?, சூனியம் செய்யப்பட்ட பொம்மைக்கும் அந்த ஆத்மாவுக்கும் என்ன தொடர்பு?, ஸ்முருதி வெங்கட் அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து தன் வீட்டையும், பிள்ளையையும் காப்பாற்றினரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
பயமுறுத்தும் ஆவியாக, தன்னை கொலை செய்தவர்களை பழி வாங்க துடிப்பதும், ஆக்ரோஷத்தையும் பயமுறுத்தலையும் ஒரு சேர கொண்டு வந்து அவர்களை அழிக்கும் தருணங்களும் என சோனியா அகர்வால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்முருதி வெங்கட் சிறப்பாக நடித்து உள்ளார். கணவனிடம் காட்டும் காதல், மகனிடம் வெளிப்படுத்தும் பாசம், பேய் விசமங்களால் படும் அதிர்ச்சி என பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
ரோஷன்பஷீர் இரண்டு பெண்களின் கனவு நாயகனாக இருப்பது அவருக்குப் பலம். சினேகா குப்தா வில்லத்தனம் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம் என்றாலும், திகில் காட்சிகளில் பின்னணி இசைக்காக இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். இசையமைப்பாளராக சித்தார்த் விபின் கவனம் பெறவில்லை என்றாலும், நடிகராக கவனம் ஈர்க்கிறார். அதிலும், காமெடி கலந்த வில்லனாக அவர் நடித்த விதம் ரசிக்க வைக்கிறது.
பிளாக் மேஜிக் மூலம் படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைப்பவர், அடுத்தடுத்த காட்சிகளில் ஏதோ பெரிய விசயத்தை சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தி விடுகிறார். வழக்கமான கதை தான் என்றாலும் படத்தின் பிற்பகுதியை வித்தியாசமாக சிந்தித்து கதையை கொடுத்து இருக்கிறார்,படத்தின் டைரக்டரான ஹாரூன்.