சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 வருடங்களுக்கு முன்பே உருவான படம் தான் மதகஜராஜா. பல சிக்கல்களை சந்தித்து ஒரு வழியாக இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளது. சுந்தர் சி, விஷால், சந்தானம் என எல்லோரும் பீக்கில் இருந்த சமயத்தில் உருவான படம் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். அந்த எதிர்பார்ப்பை எத்தனை வருடம் கழித்தும் தக்க வைத்துள்ளதா ? பார்க்கலாம்.
விஷால் போலீஸ் அதிகாரியின் மகன். திடீரென ஒரு நாள் அவரது பள்ளி ஆசிரியர், விஷால் அவரது நண்பர்களான சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் ஆகியோருக்கு போன் செய்து தனது மகளின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
விஷாலை தவிர மற்ற மூவரும் மூன்று பிரச்சனைகளோடு அந்த திருமணத்துக்கு வருகிறார்கள். சந்தானத்திற்கும் அவரது மனைவிக்குமான பிரச்சனையை அங்கேயே தீர்த்து வைக்கிறார் விஷால். மேலும் ஆசிரியரின் மகள் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனையும் தீர்த்து வைக்கிறார்.
இந்த நிலையில் சப் கலெக்டரான சடகோபன் ரமேஷ் தனது வேலையை இழந்து ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வந்திருப்பதும் நிதின் சத்யா பல லட்சங்களை தொலைத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் இதற்கு காரணம் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரன் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள நபரான சோனு சூட் என்பதும் விஷாலுக்கு தெரிய வருகிறது.
நண்பர்கள் இருவரின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்னைக்கு கிளம்பி வரும் விஷால் சோனு சூட்டுக்காக எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறார். அவரின் ஒவ்வொரு அஸ்திவாரத்தையும் ஆட்டம் காண வைக்கிறார். ஆனால் சோனு சூட் விஷாலை சமாளித்து தானே அரசியல்வாதி அவதாரம் எடுக்க முயற்சிக்கிறார். இதில் எப்படி சோனு சூட்டை சமாளித்து விஷால் தனது நண்பர்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதி கதை.
எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் சிக்ஸ் பேக்ஸ் உடம்பு, வில்லனிடம் கெத்தாக விடும் சவால், டபுள் ஹீரோயின்களிடம் ரொமான்ஸ் என்று கலகல விஷால் ரசிக்க வைக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவருக்கும் நிச்சயம் போட்டி நிலவியிருக்கும். அதான், பாடல் காட்சிகளில் அம்மணிகள் போட்டி போட்டு காட்டியிருக்கிறார்கள்.
இப்போது நாயகனாகிவிட்ட சந்தானம், இந்தப்படத்தில் தன் நகைச்சுவை நடிப்பால் நன்றாகச் சிரிக்க வைக்கிறார்
மறைந்த மணிவண்ணன்,மனோபாலா,மயில்சாமி,சிட்டிபாபு,சீனுமோகன் ஆகியோரை திரையில் பார்ப்பது மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் ஒரு சேரக் கொடுக்கிறது. குறிப்பாக அரசியல்வாதி பின் சடலமாக வந்து இரண்டாம் பாதியில் முக்கிய பங்களிப்பில் கலகலக்க வைக்கிறார் மனோபாலா.
விஜய் ஆண்டனி இசையில் அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் உள்ளதால் படத்தில் பாடல்களுக்கு பயங்கர கைதட்டல் விசிலுடன் ஆட்டம் போட வைத்துள்ளார். பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு இணையாக அசத்தியுள்ளது.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் கேமராவை சுழலவிட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான பாணியில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு எளிமையான கருவுக்கு, எளிமையான மற்றும் பழைய பாணியில் திரைக்கதை அமைத்தாலும் அதை அனைத்து தரப்பினரும் சிரிக்க கூடிய விதத்தில் இயக்கியிருக்கிறார்.