அமானுஷ்ய உலகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றிய திகில் படம் தான், ‘தி அக்காலி’. அதை ‘சாத்தானியம்’ அதாவது சாத்தான்களை வழிபடுபவர்களின் கோணத்தில் இருந்து சொல்லியிருக்கிறார்கள். படம் எப்படியிருக்கிறது ? பார்க்கலாம்
கதை நடக்கும் ஆண்டு 2016. ஒரு ஹை ப்ரொஃபைல் கேஸ் இன்வெஸ்டிகேஷன். அதன் அதிகாரி ஸ்வயம் சித்தா. அமானுஷ்ய மரணங்கள் தொடர்பான விசாரணையை, காவல்துறை அதிகாரியாக இருந்த ஜெய்குமாரிடம் விசாரித்து வருகிறார். இது சம்பந்தமான காட்சிகள், கிறிஸ்தவர்களின் கல்லறையிலிருந்து தொடங்குகிறது.
அந்த கல்லறையில் புதைக்கப்பட்ட உடல்கள், தோண்டி எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. போலீஸ், போதை பொருள் கடத்தல் கும்பலின் வேலையாக இருக்கும் என சந்தேகிக்கிறது. தொடர்ந்து விசாரணை செய்யும் போது, அமானுஷ்ய மரணங்களின் பின்னணி குறித்த சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கிறது.
போலீஸாரின் தொடர் விசாரணைக்குப் பிறகு, சாத்தான்களை வழிபடுபவர்களைப் பற்றியும், நரபலிகள் பற்றியும் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான், ‘தி அக்காலி’ படத்தின் கதை.
பொதுவாக இதுபோன்ற பிளாக் மேஜிக், அமானுஷ்யம், பில்லி, சூனியம், மாந்திரீகம், நரபலி போன்ற இயல்பான மனித நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷடயங்களை புனைவு கதையாக விவரிக்கும் போது நேரடியான திரைக்கதை உத்தியை பயன்படுத்துவது தான் குழப்பம் இல்லாமல் இயக்குநர் விவரிக்கும் கதையை ரசிகர்களும், பார்வையாளர்களும் பின் தொடர்வார்கள்.
ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதையை நான் லீனியர் பாணியில் அமைத்ததுடன் மட்டுமல்லாமல், அதில் ஃப்ளாஷ் பேக்கையும் இணைத்து, குழம்பி, ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள் படக்குழுவினர். குறிப்பாக சண்டைக் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளில் கூட நான் லீனியராக ‘கட்’ செய்து சொல்லி இருப்பது டூ மச்.
நாசரின் கதாபாத்திரம் சாத்தான்களை பற்றியும், அதன் தலைவனை பற்றியும் , சாத்தான்களை வழிபடும் முறைகளை பற்றியும் விவரித்திருப்பது புதிதாக இருந்தாலும் அதில் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்.
முதல் பாதி திரைக்கதையை அனுபவிக்க நடிகர் ஜெயக்குமார் ஆக்கிரமிக்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதையை நாசர் ஆக்கிரமித்திருக்கிறார். இவர்களைக் கடந்து படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை திரையில் செய்திருக்கிறார்கள். பலரிடத்தில் மிகையான நடிப்பும், செயற்கையான நடிப்பும் அப்பட்டமாக தெரிகிறது.
படத்திற்கு பலமாக அமைய வேண்டிய கிராபிக்ஸ் காட்சிகள் தேவையான இடத்தில் நேர்த்தியாக உபயோகிக்கப்படவில்லை. இருந்தாலும் பல இடங்களில் வி எஃப் எக்ஸ் குழுவினரின் கடுமையான உழைப்பு தெரிகிறது.
படத்திற்கு ஒளிப்பதிவாளரும், பின்னணி இசையமைப்பாளரும், கலை இயக்குநரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகின்றனர்.